அதிபர் புதினுக்கு பகவத் கீதை புத்தகத்தை பரிசளித்த பிரதமர் மோடி.
புதுடெல்லி: இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி பல்வேறு பொருட்களை பரிசாக வழங்கி உள்ளார். அதன் விவரம் வருமாறு:
ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பகவத் கீதை புத்தகம்.
அசாம் மாநிலத்தில் மிக சிறப்பாக விளைந்த புவிசார் குறியீடுபெற்ற ‘பிளாக்’ தேயிலை தூள். இந்த தேயிலை தூள் பிரம்மபுத்ரா சமவெளியில் விளைவிக்கப்படுகிறது.
மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில் உருவாக்கப்பட்ட வெள்ளி தேநீர் தட்டு மற்றும் கோப்பைகள். இந்த தட்டு, கோப்பைகளில் நுண்ணிய வேலைப்பாடுகள் இருக்கும்.
தேநீர் கோப்பைகளுடன் வெள்ளி தட்டு, அசாம் தேயிலை தூள், வெள்ளி குதிரை, காஷ்மீர் குங்குமப் பூ.
காஷ்மீரின் குங்குமப் பூ. உலகில் மிகவும் விலை உயர்ந்தது குங்குமப் பூ. இதன் நிறம், மணம் பிரபலமானது. இதை சிவப்பு தங்கம் என்றும் கூறுகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உருவாக்கப்பட்ட வெள்ளி குதிரை. இதில் நுணுக்கமான வேலைப்பாடுகள் அதிகம் இருக்கும். அதற்காகவே இந்த வெள்ளி குதிரை புகழ்பெற்றது. இந்த பரிசுப் பொருள் இந்திய - ரஷ்ய நாடுகளின் கண்ணியம் மற்றும் வீரத்தை பறைசாற்றுவதாக உள்ளது. மேற்கூறிய பரிசுப் பொருட்களை பற்றி பிரதமர் மோடியிடம் அதிபர் புதின் கேட்டறிந்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் சைவ விருந்து: ரஷ்ய அதிபர் புதினுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் சைவ விருந்து கொடுக்கப்பட்டது. இந்த விருந்தில் வழங்கப்பட்ட உணவு வகைகளின் விவரம் வருமாறு: முருங்கை இலை சாறு, தென் இந்தியாவின் ரசம், வால்நட் சட்னி உளுந்தில் செய்யப்பட்ட கெபாப், காய்கறியில் செய்யப்பட்ட மோமோ, அதற்கு காரசாரமான சட்னி, பனீர் ரோல், பாலக், தந்தூரி உருளைக் கிழங்கு, உலர் பழங்கள் மற்றும் குங்குமப்பூவில் செய்யப்பட்ட புலாவ், நான், ரொட்டி, பாதம் அல்வா, கேசர் பிஸ்தா குல்பி உட்பட பல வகை உணவுகள் அதிபர் புதினுக்கு பரிமாறப்பட்டன.