பிரதமர் மோடி

 
இந்தியா

ரஷ்ய அதிபரின் இல்லம் மீது தாக்குதல் முயற்சி? - பிரதமர் மோடி கவலை

மோகன் கணபதி

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லம் மீது உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அது குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வர தூதரக முயற்சிகளை தொடருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘ரஷ்ய அதிபரின் இல்லம் குறிவைக்கப்பட்டதாக வரும் செய்திகள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். பகைமையை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை அடைய தற்போதைய தூதரக முயற்சிகளே மிகவும் சாத்தியமான வழி. எனவே, சம்பந்தப்பட்ட அனைவரும் இந்த முயற்சிகளில் கவனம் செலுத்துமாறும் அவற்றை பலவீனப்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் தவிர்க்குமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

புதின் வீடு மீது உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஃப்ளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை யார் என்னிடம் சொன்னார்கள் தெரியுமா?.

புதினே என்னை தொலைபேசியில் அழைத்து இதனைத் தெரிவித்தார். இது நல்லதல்ல. நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். அதேவேளையில் இந்தச் செய்தி பொய்யாகவும் இருக்கலாம். தாக்குதல் நடக்காமல் இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை தாக்குதல் உண்மையென்றால். அது நடந்திருக்க இது சரியான தருணம் இல்லை” என தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “உக்ரைனின் இந்த தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதல் முயற்சி அரசு தீவிரவாதம் அன்று வேறென்ன? இதற்காக உக்ரைன் மீது எதிர் தாக்குதல் நடத்துவோம். அதற்கான இலக்குகளை தேர்ந்தெடுத்துவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் மேற்கே உள்ள நோவாகோரோட் பகுதியில் புதினின் வீடு உள்ளது. இதைத்தன் உக்ரைன் தொலைதூரம் சென்று தாக்கவல்ல ட்ரோன்களை ஏவி தாக்கியுள்ளதாக ரஷ்யா குற்றஞ்சாட்டுகிறது. புதினின் வீட்டைக் குறிவைத்து 91 ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜெலன்ஸ்கி மறுப்பு: இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கும் உக்ரைன் அதிபர் வொலிடிமிர் ஜெலன்ஸ்கி, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குழுவின் போர் நிறுத்த முயற்சியைக் குலைக்கவே ரஷ்யா இப்படிச் செய்கிறது. புதின் வீட்டின் மீதான தாக்குதல் என்பது புனைவுக் கதை. போர் நிறுத்தத்தைத் தடுக்கும் ரஷ்யாவின் முயற்சி. இன்னும் சொல்லப்போனால், இது ரஷ்யாவின் வழக்கமான பொய்.

ரஷ்யா கீவ் நகர் மீதும், அமைச்சரவை மீதும் ஏற்கெனவே தாக்குதல் நடத்தி உள்ளது. ஆனால், பதில் தாக்குதல் நடத்தினால், போர் நிறுத்த முயற்சி பாதிக்கப்படும் என்று உக்ரைன் எதுவுமே செய்யவில்லை.” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT