ஹைதராபாத்: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) மாணவர் போராட்டங்களின் போது, பிரதமர் மோடியைக் குறிவைத்து முகநூல் (பேஸ்புக்), இன்ஸ்டாகிராமில் அவதூறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பரப்பியதாக, மெட்டா அமைப்பின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மற்றும் பல சமூகவலைதள கணக்குகளின் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக தெலங்கானா பாஜக நிர்வாகி டி.சாய்கிரண் கவுட், தொழிலதிபர் எஸ்.அரவிந்த் ரெட்டி (29) ஆகிய இருவரும் புகார் அளித்தனர். அதில், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களைப் பார்வையிட்டபோது, பிரதமரை மிகவும் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும், தவறான வழியில் சித்தரிக்கும் வகையிலும் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட இத்தகைய போலி உள்ளடக்கங்கள், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தவும், வன்முறையைத் தூண்டவும், சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைத்துச் சமூகப் பிரிவினையை ஏற்படுத்தவும் கூடிய ஆபத்து கொண்டவையாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மெட்டா அமைப்பின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மற்றும் பல சமூக வலைதள கணக்குகளின் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் மற்றும் ஜூலை 20 பேரணியின் போது பிரதமருக்கு எதிராகப் பதிவேற்றப்பட்ட அனைத்து அவதூறு வீடியோக்கள் மற்றும் கருத்துகளை உடனடியாக நீக்குமாறு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு டெல்லி போலீஸார் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.