விஜயநகரம்: ஆந்திராவில் உள்ள போகாபுரம் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். ரூ.18,000 கோடி செலவில் கட்டப்பட்ட பல வளர்ச்சி திட்டங்களையும் பிரதமர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முதல் பயணிகள் விமான சேவையை ரத்து செய்து, அதற்கு பதில், விஜயநகரம் மாவட்டம், போகாபுரத்தில் ரூ.4,727 கோடி செலவில் கட்டப்பட்ட அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஆந்திராவில் தற்போது ரூ.18 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது ஆந்திர மாநிலம், பொருளாதார ரீதியாகவும், பூகோள ரீதியாகும் மிகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு காரணம் இம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தான். அவரின் தொலைநோக்குப் பார்வையை நான் பெரிதும் மதிக்கிறேன்.
போகாபுரம் சர்வதேச விமான நிலையம் இங்கு அமைந்ததால், இப்பகுதி விரைவில் பெருமளவு வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் இளைஞர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். கடந்த கால ஆட்சியில் நம் நாட்டில் எங்கு விமான நிலையங்கள் திறக்கப்பட்டாலும் ஒரே ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் தான் சூட்டப்படும். ஆனால், அந்த மரபு தற்போது இல்லை. அயோத்தியா விமான நிலையத்திற்கு வால்மீகி பெயர், பஞ்சாப் விமான நிலையத்துக்கு சந்த் ரவிதாஸ், போகாபுரம் சர்வ தேச விமான நிலையத்துக்கு சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டுக்கு முன் நம் நாட்டில் 74 விமான நிலையங்களே இருந்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த 12 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. விமான பயணம் செய்ய வேண்டும் என ஆசைப்படும் நடுத்தர, ஏழை குடும்பத்தினர் கனவை நனவாக்கி உள்ளோம். உடான் திட்டம் மூலம் நம் நாட்டில் விமான போக்குவரத்தில் பல மாற்றங்கள், வளர்ச்சிகளை கண்டு வருகிறோம்.
நாட்டில் கடல் பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்து வருகிறோம். விசாகப்பட்டினம் முதல் கிருஷ்ணபட்டினம் வரை பழைய துறைமுகங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறோம். மூலபேட்டா, ராமாய பட்டினம் ஆகிய இடங்களில் புதிய துறைமுகங்களை ஏற்படுத்தினோம். துறைமுகங்கள் ஒருபுறம் மற்றொரு புறம் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி என ஆந்திரா ஒரு புதிய வளர்ச்சி பாதையில் மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
ரூ.1 லட்சம் கோடியில்..
ஆந்திராவில் ரூ.1 லட்சம் கோடி செலவில் ரயில்வே பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. சாஃப்ட்வேர், ஐடி யில் தெலுங்கர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆந்திராவில் ‘உற்பத்தி மையம்’ உருவாகி வருகிறது. உலகில் உள்ள பல பிரபல நிறுவனங்கள் ஆந்திராவை தேடி வருகின்றன. இங்கு தொழில் தொடங்க உள்ளன. ஆந்திராவில் க்ரோக் எக்கோ சிஸ்டம் தொடங்குகிறோம். செமி கண்டக்டர், டேட்டா சென்டர் போன்ற நிறுவனங்களில் பணிகள் இங்கு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த டபுள் இன்ஜின் அரசால், ஆந்திரா இரட்டிப்பு வேகமாக செயல் படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, மற்றும் ஆந்திர எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பலர் பங்கேற்றனர்.