மேற்குவங்கத்தின் அராம்பாக் நகரில் நேற்று நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். படம்: பிடிஐ
கொல்கத்தா: சிஏஏ சட்டத்தின் மூலம் மதுவா நமாசுத்ரஸ் சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 23-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. வரும் 29-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி மேற்குவங்கத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அங்கு பங்கான் நகரில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது: திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மண், பெண், மனித நேயத்துக்கு மதிப்பு அளிக்கப்படவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தில் காட்டாட்சி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் ரவுடிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
24 பர்கானஸ் மற்றும் ஹுக்ளிபகுதிகள் ஒரு காலத்தில் தொழில்மையங்களாக இருந்தன. ஆனால் இரு பகுதிகளிலும் ஏராளமான ஆலைகள் மூடப்பட்டு உள்ளன. குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் மேற்குவங்கத்தின் தொழில் துறை முடங்கியிருக்கிறது. மாநில மக்கள் வேலை தேடி இதர மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
சந்தேஷ்காளி கொடூரத்தில் பாதிக்கப்பட்ட பெண், கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாய் ஆகியோர் பாஜகவின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர். பாஜகவை பொறுத்தவரை பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து தீவிரமாக போராடி வருகிறோம்.
மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது மேற்குவங்கத்தில் தாமரை மலரும். மேற்குவங்க இளைஞர்கள் பன்முகத் திறன் படைத்தவர்கள். ஆனால் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு மாநிலத்தை போதையின் பாதையில் அழைத்துச் செல்கிறது. இதனால் இளைஞர்கள் வழிதவறி செல்கின்றனர்.
பாஜக ஆட்சி அமைக்கும்போது போதை பொருட்களுக்கு எதிராக அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்படும். மாநில இளைஞர்களின் திறன்களுக்கு மதிப்பு அளிக்கப்படும். அறிவுசார்ந்த தொழில் துறை வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதன்மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும்.
முதல்கட்ட தேர்தலில் திரிணமூல் அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து வாக்களித்து உள்ளனர். இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்து உள்ளது. மேற்குவங்கத்தில் வாழும் மதுவா நமாசுத்ரஸ் சமூகத்தினருக்கு சிஏஏ சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்கப்படும். பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றால் இந்த வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேற்றப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மதுவா நமாசுத்ரஸ்? - மேற்குவங்கம் மற்றும் அண்டை நாடான வங்கதேசத்தில் மதுவா நமாசுத்ரஸ் மக்கள் அதிகமாக உள்ளனர். இந்த சமூகத்தை சேர்ந்த சுமார் 3 கோடி பேர் மேற்குவங்கத்தில் வசிக்கின்றனர். இவர்கள் மேற்குவங்கத்தின் பூர்வகுடி மக்கள். கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது கிழக்கு பாகிஸ்தானில் இருந்து (வங்கதேசம்) பெருந்திரளான மதுவா நமாசுத்ரஸ் மக்கள் மேற்குவங்கத்தில் குடியேறினர். கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேச போரின்போதும் இந்த சமூக மக்கள் மேற்குவங்கத்தில் தஞ்சமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு இன்னமும் குடியுரிமை கிடைக்கவில்லை.
பட்டியலின பிரிவில் உள்ள மதுவா நமாசுத்ரஸ் சமூக மக்கள், மேற்குவங்கத்தின் 45 தொகுதிகளின் வெற்றி, தோல்வியை முடிவு செய்யும் சக்தியாக உள்ளனர். அண்டை நாட்டில் இருந்து மேற்குவங்கத்தில் குடியேறிய இந்த சமூக மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.