இந்தியா

“வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களுக்கு துணை நிற்க பிரதமர் மோடி உறுதி” - கிரண் ரிஜிஜு

வெற்றி மயிலோன்

புது டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்ததாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, "நீட் தேர்வு விவகாரத்தில், நாங்கள் மாணவர்களுடன் துணை நிற்கிறோம் என்று பிரதமர் கூறினார். வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் மீது, முன்னணி வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வினாத்தாள் கசிவு என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவகாரம்; இதை அரசியலாக்கக் கூடாது. வினாத்தாள் கசிவு எங்கு நடந்தாலும், மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. சமீபத்தில் பல்வேறு நாடுகளுடன் கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்துப் பிரதமர் வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்த ஒப்பந்தங்களில் விவசாயிகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார். அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை அவர் வலியுறுத்தினார்.

எந்தவொரு நாட்டுடனும் கையெழுத்திடப்படும் வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயிகளின் நலனே முதன்மையானது என்றும், இந்த ஒப்பந்தங்கள் விவசாயிகள் மற்றும் தேச நலன்களை சிறப்பாகப் பாதுகாக்கும் வகையிலேயே அமையும் என்றும் பிரதமர் கூறினார்” என்று தெரிவித்தார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி சிஜேபி அமைப்பினர் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் கிரண் ரிஜிஜுவின் இத்தகைய கருத்துகளை தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி ஒங்கிணைப்பில் நடத்தப்பட்ட பேரணி வன்முறையில் முடிந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT