குவாஹாட்டி: அசாம் மாநில முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் நான்கு எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று முதல்வராகப் பதவியேற்றார்.
பா.ஜ.க-வின் ராமேஸ்வர் தெலி, அஜந்தா நியோக், அசோம் கண பரிஷத் கட்சியின் அதுல் போரா மற்றும் பி.பி.எஃப் கட்சியின் சரண் போரா ஆகிய நான்கு பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
கவுகாத்தியின் கானாபாரா பகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சர்வானந்த சோனோவால், பவித்ரா மார்கெரிட்டா, பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் பா.ஜ.க தலைவர் நிதின் நவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய ‘கமோசா' (துண்டு) அணிந்து, வேட்டி-குர்தா உடையில் வந்த ஹிமந்த பிஸ்வா சர்மா, அசாமிய மொழியில் பதவியேற்றார். அமைச்சர்களில் தெலி, போரா மற்றும் நியோக் ஆகியோர் அசாமிய மொழியிலும், பி.பி.எஃப் அமைச்சர் சரண் போரா போடோ மொழியிலும் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழா முடிந்ததும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இது தொடர்பாக முதல்வர் சர்மா தனது எக்ஸ் பக்க பதிவில்,”அன்னை காமாக்யா, மகாபுருஷ ஸ்ரீமந்த சங்கர்தேவ் மற்றும் அசாம் மக்களின் ஆசியுடன் முதல்வராகப் பதவியேற்றேன். அமைச்சரவை சகாக்களுடன் இணைந்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், அவர்களுக்குச் சேவை செய்யவும் காத்திருக்கிறேன். அசாம் மாநிலம் வளர்ச்சியின் புதிய உச்சங்களைத் தொடும்” என்று தெரிவித்துள்ளார்.
முந்தைய அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த அஜந்தா நியோக், வேளாண் அமைச்சராக இருந்த அதுல் போரா மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்த சரண் போரா ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரான ராமேஸ்வர் தெலி, மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பியுள்ளார்.