மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி பாஜக தலைமையகத்துக்கு வருகை தந்தார். அப்போது அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நவீன் உடனிருந்தார். படம்: பிடிஐ
புதுடெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இது மேற்கு வங்க மாநிலத்தின் வரலாற்றில் அச்சமற்ற ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார்.
மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தார்.
அப்போது அவர் தொண்டர்களிடம் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றியதாவது: மேற்கு வங்க தேர்தல் வரலாற்று வெற்றியின் மூலம், கங்கோத்திரி முதல் கங்கா சாகர் வரை எங்கும் தாமரை மலர்ந்துள்ளது. 15 ஆண்டு கால மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, முதன்முறையாக மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்பது இந்திய அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய ஜனநாயகமும், நமது அரசியலமைப்பும் மீண்டும் ஒருமுறை வென்றுள்ளது. இதற்கு, கட்சித் தலைவர் நிதின் நவீன் வழிகாட்டுதலும், தொண்டர்களின் அயராத உழைப்புமே காரணம். நிதின் நவீன் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு சந்தித்த முதல் தேர்தலிலேயே இந்த பிரம்மாண்ட வெற்றி பாஜகவுக்கு கிடைத்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு காசியில் நான் வேட்பு மனு தாக்கல் செய்த போது தாய் கங்கை என்னை அழைத்தாள். இன்று கங்கை மட்டுமின்றி பிரம்மபுத்திரா மற்றும் அன்னை காமாக்கியாவின் ஆசியும் பாஜகவுக்குக் கிடைத்துள்ளது. இதன் மூலம் அசாமில் தொடர்ந்து 3-வது முறையாக பாஜக கூட்டணி ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நிலவி வரும் வன்முறை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பழி வாங்கும் அரசியலுக்குப் பதிலாகப் பண்பட்ட மாற்றத்துக்கான அரசியலே இங்கு முன்னிறுத்தப்பட வேண்டும். மேற்கு வங்கம் மட்டுமின்றி, மகாராஷ்டிரா, குஜராத், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் பாஜகவுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளன. குறிப்பாக, பாராமதி தொகுதியில் மகாராஷ்டிர துணை முதல்வர் சுனேத்ரா பவார் பெற்ற வெற்றி பாராட்டுக்குரியது.
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற மேற்கு வங்க தேர்தலில், பல்வேறு சவால்களைக் கடந்து பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான 148 இடங்களைத் தாண்டி 200-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி வங்க மண்ணில் புதிய அரசியல் வரலாற்றை எழுதியுள்ளது.
ஜனநாயகத்துக்கு வெற்றி: நமது அரசியலமைப்பு நிறுவனங்களும், ஜனநாயக நடைமுறைகளும் இன்று வெற்றி பெற்றுள்ளன. மேற்கு வங்கத்தில் 93 சதவீத வாக்குப் பதிவு என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. அசாம், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் புதிய வாக்குப் பதிவு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
இந்திய ஜனநாயகத்தின் மாண்பைக் காத்த தேர்தல் ஆணையம், அதன் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது பங்களிப்பை வரலாறு என்றும் நினைவில் கொள்ளும். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அமித் ஷா புகழாரம்: மேற்கு வங்கத்தில் 2 வாரங்களுக்கு மேலாக முகாமிட்டு தேர்தல் வியூகங்களை வகுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘‘இந்த வெற்றி வரலாற்று சாதனை’’ என்று வர்ணித்துள்ளார். மேலும், இந்த வெற்றி ஊடுருவல்காரர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.