ஜஎன்எஸ் துனகிரி போர்க்கப்பல்.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இன்று நடைபெறவுள்ள விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
அப்போது ஐஎன்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் அக்ராய், ஐஎன்எஸ் சன்ஷோதக் ஆகிய 3 அதிநவீன போர்க் கப்பல்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளார்.
மத்திய அரசின், ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ், இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகம் இக்கப்பல்களை வடிவமைத்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் இந்த 3 கப்பல்களையும் மிக நேர்த்தியாகக் கட்டி முடித்துள்ளது.
ஒரே நேரத்தில் வெவ்வேறு திறன்களைக் கொண்ட 3 முன்னணிக் கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்படுவது இந்திய வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும்.
ஐஎன்எஸ் துனகிரி போர்க் கப்பலானது, எதிரி நாடுகளின் ரேடார்களின் கண்களில் படாமல் கடலில் மறைந்து பயணிக்கும்.
இதில் எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஐஎன்எஸ் அக்ராய் கப்பலானது நீர்மூழ்கி வேட்டையாடி வகையைச் சேர்ந்ததாகும். இது அர்னாலா கிளாஸ் எனப்படும் ஆழமற்ற கடற்பகுதியில் பயணிக்கும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல் ஆகும்.
ஐஎன்எஸ் சன்ஷோதக் கப்பலானது, பெரிய ஆய்வுக் கப்பலாகும். இது கடலாய்வுப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட 4-வது பெரிய சர்வே கப்பல் என்று அழைக்கப்படுகிறது. ஆழ்கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள நிலப்பரப்புகளைத் துல்லியமாக வரைபடம் தயாரிக்க இந்தக் கப்பல் உதவும்.