புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சித் தலைவர்களை மாவோயிஸ்ட் மனப்பான்மை கொண்டவர்கள் என்று குறிப்பிடவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரின் தியாகத்தை நினைவுகூர்ந்தார். அத்துடன் மாவோயிஸ்ட்களை வெற்றிகரமாக ஒழித்ததற்காக அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஆயுதம் ஏந்திய நக்சலைட்களை ஒழித்துவிட்டாலும், பொது வாழ்விலும், அரசு குழுக்களிலும் ஊடுருவி வன்முறைக்கு வாய்ப்புத் தேடும் ‘திமாகி நக்சல்களை’ (சிந்தனை நக்சல்கள்) அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி பேசினார்.
பிரதமரின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சி்கள்் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “நான் ஒரு ‘திமாகி நக்சல்’ என்பதில் பெருமையடைகிறேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மாவோயிஸ்ட்களை ஆதரிப்பவர்கள், இந்திய அரசியல மைப்பை நிராகரிப்பவர்கள், பிரிவினைவாதத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ ஆதரிப்பவர்களை மட்டுமே ‘திமாகி நக்சல்கள்’ (நகர்ப்புற நக்சல்கள்) என்ற வார்த்தை குறிக்கும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள 22 கி.மீ அகலமுள்ள ‘சிக்கன்ஸ் நெக்’ (கோழிக் கழுத்து) நிலப்பகுதியைத் துண்டித்து, வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து தனிமைப்படுத்தப் பார்ப்பவர்களையும் இச்சொல் குறிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.