புதுடெல்லி: ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இலங்கையை 72 ரன்களில் வீழ்த்தியது. இது இந்திய அணி வெல்லும் 8-வது ஆசிய கோப்பை பட்டம் ஆகும். நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்றது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றியை அடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
“மகளிர் டி20 ஆசிய கோப்பை 2026ல் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்திய அணிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இந்த தொடரில் ஒரு அணியாக இணைந்து சிறப்பாக விளையாடி, அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றனர். அதன் மூலம் தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
நமது நாட்டு இளைஞர்கள், குறிப்பாக நமது மகள்களுக்கு பெரிய அளவில் உத்வேகம் அளிப்பவர்களாகத் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் திகழ்கிறார்கள். தங்களது அடுத்தடுத்த வெற்றிகள் மற்றும் செயல்பாடுகள் மூலமாக இன்னும் உத்வேகம் தரும் அத்தியாயங்களை நிச்சயம் படைப்பார்கள் என்று உறுதியாக நான் நம்புகிறேன்” என்று சமூக வலைதள பதிவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
“இந்திய கிரிக்கெட் அணிக்கு பெருமையான தருணம். ஆசிய கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள். இந்த தொடர் முழுவதும் அவர்களது மன உறுதி வெளிப்பட்டது. இந்த வெற்றி மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் தரும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.