திருவனந்தபுரம்: கேரளாவின் முக்கியத் திட்டமான விழிஞ்ஞம் துறைமுகத்தின் பங்குகளை, மாநில அரசின் முன் அனுமதியின்றி சுவிட்சர்லாந்து நிறுவனத்துக்கு விற்க அதானி குழுமம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. மாநில அரசுடன் ஆலோசிக்காமல் அதானி குழுமம் எடுத்த இந்த முடிவு
கண்டனத்துக்குரியது என்று கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது குறித்துப் பேசியதாவது: அரசுக்கும் அதானி குழுமத்திற்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தின்படி, விழிஞ்ஞம் துறைமுகத்தின் 25% பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்றாலே மாநில அரசின் முன்அனுமதி கட்டாயம் தேவை. அப்படியிருக்கையில், அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் 49% பங்குகளை மாற்றியமைக்க அதானி குழுமம் துணிந்தது எப்படி? இது முற்றிலும் சட்டவிரோதமானது. அதுமட்டுமின்றி அரசுடனான ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் இது.
அதானியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக துறைமுகத் துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் வி.டி.சதீசன் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இதை ஒரு பெரிய வெளிநாட்டு முதலீடாகச் சிலர் சித்தரிக்க முயல்கிறார்கள். ஆனால், இது அதானி குழுமம் லாபம் சம்பாதிப்பதற்கான ஒரு முயற்சி மட்டுமே.
உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான எம்.எஸ்.சி இந்தத் துறைமுகத்தின் பெரும்பான்மைப் பங்குகளைக் கட்டுப்பாட்டில் எடுத்தால், விழிஞ்ஞம் துறைமுகம் அந்த ஒரு தனி நிறுவனத்தின் ஏகபோக ஆதிக்கத்திற்குள் சென்றுவிடும். இது வருவாய் இழப்புக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, பங்கு விற்பனை தொடர்பாக அதானி குழுமம் அரசிடம் எதையும் தெரிவிக்கவில்லை என்று முதல்வர் வி.டி.சதீசன், சட்டப்பேரவையில் கடந்த புதன்கிழமை கூறினார்.