புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களில் 4-வது முறையாக இதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியப் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை 50% உயர்ந்தது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டது. இதை ஈடுகட்ட கடந்த 15-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது. இதையடுத்து, கடந்த மே 19-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் தலா 90 பைசா அதிகரிக்கப்பட்டது. 3-வது முறையாக 23-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 87 பைசாவும், ஒரு லிட்டர் டீசல் 91 பைசாவும் விலை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் நேற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் உயர்த்தின. கடந்த 2 வாரங்களில் 4-வது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.99.55-க்கு விற்பனையாகிறது. இதனால் சென்னையில் எரிபொருள் விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுபோல டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவிலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.
ரூ.1 லட்சம் கோடி இழப்பு
இந்நிலையில், இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் (சிட்பி) 37-வது ஆண்டு விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, ‘‘மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி என்பது வெறும் ராஜதந்திர அல்லது புவிசார் அரசியல் பிரச்சினை மட்டுமல்ல, அது சாதாரண மக்களின் எரிபொருள் செலவுகளையும் அதிகரிக்க வழிவகுக்கும்.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும் உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தவில்லை. மாறாக இதன் மீதான கலால் வரிகள் குறைக்கப்பட்டன. இதன் மூலம் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
பணவீக்க மனிதர் மோடி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘பணவீக்க மனிதர் மோடி மீண்டும் தாக்கியுள்ளார். உங்கள் பாக்கெட்டில் இருந்து அமைதியாகப் பணம் பறிக்கப்படுவதற்காக, அவர்கள் பெட்ரோல்-டீசல் விலையைத் தவணை முறையில் உயர்த்துகிறார்கள்’’ என கூறியுள்ளார்.