புதுடெல்லி: கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு மீது, மத்திய அரசு, இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் சட்ட ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் கீழ் உள்ள கட்சித் தாவல் தடைச் சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் அதில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி, சென்னையைச் சேர்ந்த ஏ.சேது என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக, தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போதே திட்டமிட்டு ராஜினாமா செய்கின்றனர். இதன் மூலம் அவையின் பலம் மாற்றியமைக்கப்படுகிறது.
எனவே, தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தாலும், அந்தத் தகுதி நீக்க நடவடிக்கையைத் தானாகவே ரத்து செய்துவிடக் கூடாது.
ராஜினாமா உண்மையானதா மற்றும் தன்னிச்சையாக அளிக்கப்பட்டதா என்பதைச் சபாநாயகர் ஆராய்ந்து காரணங்களுடன் கூடிய உத்தரவைப் பிறப்பிக்கும் அதே வேளையில், நிலுவையில் உள்ள தகுதி நீக்க மனு மீதும் சுதந்திரமாகத் தீர்ப்பளிக்க வேண்டும்.
ராஜினாமாக்கள் மற்றும் தகுதி நீக்க மனுக்கள் மீது குறிப்பிட்ட காலவரையறைக்குள் வெளிப்படையான முறையில் முடிவெடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சபாநாயகரை மையமாகக் கொண்ட தற்போதைய தீர்ப்பளிக்கும் நடைமுறையை மறுஆய்வு செய்ய வேண்டும். தொங்கு சட்டசபை அமையும் சூழலில், அரசியலமைப்புப் பிரிவு 188-ன் கீழ் உறுப்பினர்கள் பதவியேற்ற பிறகு, முறையாகக் கூட்டப்பட்ட பேரவையின் தளத்தில் மட்டுமே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அவைக்கு வெளியே அளிக்கப்படும் ஆதரவுக் கடிதங்கள் மூலம் முடிவெடுக்கக் கூடாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.சிராஜுதீன், “இது ஒரு மிக முக்கியமான விவகாரம் என்பதால் நீதிமன்றம் பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்ற நீதிபதிகள், மத்திய சட்ட அமைச்சகம், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம், இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் சட்ட ஆணையம் ஆகியவை இந்த மனுவுக்குப் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.