புதுடெல்லி: அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “தமிழகத்தில் 38 காவல் நிலையங்களில் இருந்த 41 ஆவணங்கள் திருடுபோய் உள்ளன. சிலை கடத்தல் வழக்கின் ஆவணங்கள், சி.டி.க்கள் மாயமானது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? எப்.ஐ.ஆர் கணினிமயமாக்கப்பட்டு விட்டதா?
சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன, அதற்கு என்ன காரணம்? என்ற கேள்விகளை எழுப்பியது. அதோடு, இது குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு அதிகாரி உடனடியாக நியமிக்கப்பட்டு, வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 3,000 சிலைகள் மற்றும் பழங்கால கலை பொருட்கள் அமெரிக்க அருங்காட்சியகங்களில் உள்ளன என்று அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பஞ்சலோக செம்பியன் மாதேவி, திருஞானசம்பந்தர், கால பைரவர், மகாவீரர், புத்தர் சிலைகள் உள்ளிட்டவையும், விலைமதிப்பற்ற சிவசக்தி ருத்ராட்ச மாலை மற்றும் பழங்கால கலை பொருட்களும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதுபோல, மகாராஜா போஜாவால் நிறுவப்பட்ட 11ம் நூற்றாண்டின் பளிங்கு கல்லாலான சரஸ்வதி தேவி சிலையானது இங்கிலாந்து நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை தூதரக அளவிலான பேச்சு வார்த்தை மூலம் இந்தியாவுக்கே கொண்டு வர வேண்டும். அதற்கு ஏதுவாக உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தையும் இந்த வழக்கில் இணைத்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.