இந்தியா

“தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க அனுமதி மறுப்பு” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மோகன் கணபதி

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்திக்க 300-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் விரும்புவதாகவும், ஆனால் தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மக்களை பிரதிநிதித்தவப்படுத்தும் எம்பிக்களை தேர்தல் ஆணையம் சந்திக்கவில்லை என்றால், ஜனநாயகத்துக்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி வலக வலியுறுத்தி காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டெல்லியில் இன்று பேரணியில் ஈடுபட்டன. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணி புறப்பட்டது. இதில், காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியை முன்னிட்டு, தேர்தல் ஆணைய அலுவலகப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டதோடு, ஏராளமான தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்துக்குள் நுழைய முயன்ற ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் தடுக்கப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், எம்பிக்கள் தடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இன்று 300க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களைச் சந்திக்க விரும்பினர். ஆனால், நாங்கள் தடுக்கப்பட்டோம். நாங்கள் நாட்டின் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம். நாங்கள் அவர்களின் குரலாக இருக்கிறோம்.

தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மக்களை பிரதிநிதித்தவப்படுத்தும் எம்பிக்களை தேர்தல் ஆணையம் சந்திக்கவில்லை என்றால், ஜனநாயகத்துக்கு என்ன அர்த்தம்?

நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பாகவத், ஞானேஷ் குமார் ஆகியோர் நாட்டின் ஜனநாயகத்தைச் சீர்குலைத்துள்ளனர். இது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். இவர்கள் வாக்குகளைத் திருடி நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இவர்களில் யாரும் தப்ப முடியாது. இவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். நாங்கள் அவர்களை வெறுமனே எதிர்க்க மாட்டோம்; அழிப்போம்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT