ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
குப்பம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனது குப்பம் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் தொடங்கினார். இதில் 2-ம் நாளான நேற்று ரூ.117 கோடி செலவில் அதிநவீன பஸ் நிலையம் மற்றும் பணிமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ராயலசீமா மாவட்டங்களில் ரூ.1 லட்சம் கோடி செலவில் தோட்டக்கலை மையம் அமைக்கப்பட உள்ளது. இதில் தனியார் ரூ.60 ஆயிரம் கோடியும், அரசு ரூ.40 ஆயிரம் கோடியும் முதலீடு செய்ய உள்ளன.
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக இனி பேட்டரி வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும். ஸ்கூட்டர்கள், கார்கள், பேருந்துகள் எல்லாம் பேட்டரியில் இயங்க வேண்டும். அப்போது தான் சுற்றுச்சூழல் மேன்மை அடையும். விரைவில் ஆந்திர அரசு பேருந்துகள் சூரிய சக்தி மூலம் இயங்கும்.
பிரபல ‘அடிதாஸ்’ நிறுவனம் ஆந்திராவுக்கு வரவுள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.