புதுடெல்லி: தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டுப் பிரச்சனையைத் தீர்க்கப் புதிய தீர்ப்பாயம் அமைப்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் மகதாயி நீர் தகராறு தீர்ப்பாயத்திடம் வழக்கை ஒப்படைக்கக் கோரிய மத்திய அரசின் மனுவுக்கு தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் 2 வாரத்தில் பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
தென் பெண்ணையாற்றின் குறுக்கே யல்கோல் என்ற பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்து வந்தது. அதற்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இரு மாநிலங்களுக்கிடையே சமரச பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசுக்கு அறிவறுதல் வழங்கியது. ஆனால் அந்த சமரச பேச்சுவார்த்தையில் இரு மாநிலங் களுக்கிடையே உடன்பாடு எட்டப்படவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனையடுத்து, தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக் கிடையேயான தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டுப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக தனித் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி 2-ம் தேதிஉச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கப் புதிய தீர்ப்பாயம் அமைப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் மகதாயி நீர் தகராறு தீர்ப்பாயத்திடம் வழக்கை ஒப்படைக்கக்கோரி மத்திய அரசு புதிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது, அந்த மனுவில், கால தாமதத்தைத் தவிர்க்கவும், விரைவாகவும் சிக்கனமாகவும் முடிவெடுக்கவும் இந்த நடவடிக்கை உதவும் எனக் கூறப்பட்டிருந்தது
இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சதீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி ஆஜராகி, தென்பெண்ணையாறு விவகாரத்தில் புதிய தீர்ப்பாயத்திற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவது கால தாமதத்தை ஏற்படுத்தும். எனவே, தற்போது பணி இல்லாமல் இருக்கும் மகதாயி நடுவர் மன்றத்திடம் தென்பெண்ணையாறு விவகாரத்தை ஒப்படைக்கலாம். இதன் மூலம் வழக்கு விரைவாகவும், சிக்கனமான முறையிலும் முடிவுக்கு வரும். எனவே உச்ச நீதிமன்றத்தின் பிப்ரவரி 2ம் உத்தரவில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
மத்திய அரசின் இந்தக் கோரிக்கைக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் உமாபதி, “தென்பெண்ணையாறு விவகாரத்திற்கு நிரந்தரமான தனித் தீர்ப்பாயம் அமைப்பது மட்டுமே சரியான தீர்வாக அமையும். ஏற்கனவே உள்ள தீர்ப்பாயத்தைப் பயன்படுத்தும் போது தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தில் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்படும்” என்று திட்டவட்டமாக வாதிட்டார்.
அப்போது கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர், மத்திய அரசின் மனுவுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிப்பதாக தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டுப் பிரச்சினையை மகதாயி தீர்ப்பாயத்திடம் ஒப்படைப்பது தொடர்பான மத்திய அரசின் மனு மீது தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகள் 2 வார காலத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.