புதுடெல்லி: விமானிகள் பற்றாக்குறையால் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களுள் ஒன்றான இண்டிகோ நிறுவனம் கடந்த சில நாட்களாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் தினமும் சராசரியாக 400-க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்றும் கூட ஒரே நாளில் 400 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து இண்டிகோ நிறுவன விமானங்களில் பயணம் செய்யவிருந்த பயணிகள் புலம்பித் தவித்து வருகின்றனர்.
சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதைப் பார்க்க முடிந்தது. அகமதாபாத் விமானநிலையத்தில் நேற்று அதிகாலை 12 மணி முதல் காலை 6 மணி வரை இண்டிகோ நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகள் அனைவரும் புலம்பித் தள்ளினர். குறித்த நேரத்தில் ஊருக்குச் செல்ல முடியாத விரக்தியும் அவர்களிடத்திலிருந்து வெளிப்பட்டது.
மஹரிஷி ஜானி என்ற பயணி கூறும்போது, “இன்று காலை 6.15 மணிக்கு குவாஹாட்டிக்கு செல்லவிருந்தேன். இது கொல்கத்தா வழியாக செல்லும் கனெக்ட்டிங் விமானம் ஆகும். ஸ்மார்ட் இண்டியா ஹாக்கத்தான் நிகழ்ச்சிக்காக செல்லவிருந்தேன். இதற்காக சுமார் 74 ஆயிரம் திட்டங்களை நாங்கள் சமர்ப்பித்திருந்தோம். இதில் 1,400 திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. எங்களுக்கு நார்த்-ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழகம் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது எப்படிச் செல்வது என்று தெரியவில்லை. எங்களது 7 மாத கடின உழைப்பு வீணாகிவிட்டது.
நாங்கள் 6 பேர் கொண்ட குழுவாக இந்த ஐடியாக்களை தயார் செய்திருந்தோம். இப்போது அனைத்து திட்டங்களும் முடிவுக்கு வந்துவிட்டது. வேறு விமானங்களும் இல்லை. ரயிலில் சென்றால் அந்த இடத்தை அடைய 3 நாட்களாகும். எனவே, தற்போது வீடு திரும்புகிறோம். கடின உழைப்பு வீணாகிவிட்டது. சில வாய்ப்புகள் அரிதாகத்தான் கிடைக்கும். நாங்கள் முதல் முயற்சியிலேயே தேர்வு செய்யப்பட்டு விட்டோம். ஆனால், விமானம் ரத்தானதால் போக முடியவில்லை’’ என்றார்.
மற்றொரு பயணி இக்லாக் ஹுசைன் கூறும்போது, “நான் ஜெட்டாவிலிருந்து அகமதாபாத்துக்கு வந்துவிட்டேன். இங்கிருந்து எனது சொந்த ஊரான லக்னோவுக்கு செல்ல வேண்டும். ஆனால் கடந்த 2 நாட்களாக இங்கேயே சிக்கி இருக்கிறேன். விமானங்கள் இல்லை. விமானச் சேவை நிறுவனங்கள் மீது பயணிகள் கொந்தளிப்புடன் உள்ளனர்’’ என்றார்.
ஒடிசாவின் புவனேஸ்வரில் உளள பிஜு பட்நாயக் சர்வதேச விமானநிலையம், பெங்களூரு விமானநிலையம் உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதிப்பட்டு நிற்கும் நிலைமை நேற்றும் தொடர்ந்தது.