புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. அப்போது சீனா-எல்லைப் பிரச்சினை தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதி வெளிவராத புத்தகத்தில் உள்ள தகவல்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கோள் காட்டினார்.
இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் 8 எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக அமளி தொடர்கிறது. இதனால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்துக்கு ரூ2.5 லட்சமும், ஒரு மணி நேரத்துக்கு ரூ.1.5 கோடியும், நாள் ஒன்றுக்கு ரூ.9 கோடியும் செலவாகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து இதுவரை மக்களவை 30 முதல் 35 மணி நேரம் செயல்பட்டிருக்க வேண்டும். இதில் 20 முதல் 25 மணி நேரம் அமளி காரணமாக வீணாகியுள்ளது. இதனால் மக்களவை இழப்பு மட்டும் ரூ.30 முதல் ரூ.35 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் மாநிலங்களவையில் அமளி காரணமாக 12 முதல் 15 மணி நேரம் வீணாகியுள்ளது. இங்கு ஏற்பட்ட இழப்பு ரூ.18 முதல் ரூ.22 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்பட்ட அமளி காரணமாக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து இதுவரை ரூ.57 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.