இந்தியா

“மேற்கு ஆசிய போர் குறித்த நாடாளுமன்ற விவாதம் மிக மிக அவசியம்” - ராகுல் காந்தி

‘இந்திய பொருளாதாரம் பேரழிவைச் சந்திக்க நேரிடலாம்’

மோகன் கணபதி

புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நடப்பது ஒரு சாதாரண போர் மட்டுமல்ல என்றும், அது உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது மிக மிக அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘‘மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் இந்திய பொருளாதாரம், பங்குச் சந்தை, எரிபொருள் விலை ஆகியவற்றுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இது ஒரு சாதாரண போர் மட்டுமல்ல; முன்னுதாரணத்தை மாற்றுவதற்கான உலகின் மிகப் பெரிய நிகழ்வு. இதன் நேரடி தாக்கம் இந்திய பொருளாதாரத்தில் எதிரொலிக்கிறது. சமீபத்திய பங்குச் சந்தை வீழ்ச்சி அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

          

இந்த விவகாரம் குறித்து விரைவாக விவாதம் நடத்தப்பட்டு உறுதியான திட்டம் உருவாக்கப்படாவிட்டால், இந்திய பொருளாதாரம் பேரழிவைச் சந்திக்க நேரிடலாம். இது ஒரு தேசிய அவசரநிலைச் சூழல். இது குறித்து உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும்.

அமெரிக்கா உடனான இந்தியாவின் ஒப்பந்தத்தில், நாட்டின் நலன்களுக்கு எதிரான அம்சங்கள் அடங்கி இருக்கின்றன. எதிர்காலத்தில் அது நாட்டுக்கு பெரிய அதிர்ச்சியை அளிக்கக்கூடும். இது குறித்த விவாதத்தை அரசு தவிர்ப்பதன் மூலம், பிரதமர் மோடியின் நிலை எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. விவாதம் நடத்தப்பட்டால் அவர் பிளாக்மெயில் செய்யப்படுகிறார் என்பது வெளிச்சத்துக்கு வரும். எனவேதான் விவாதத்தை அரசு தவிர்க்கிறது. பிரதமர் மோடி மிரட்டப்பட்டு சமரசம் செய்துகொள்ள வைக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைகள் பொதுமக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையவை. இவை இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும். முக்கியமில்லாத விஷயங்களில் நேரத்தை வீணாக்காமல் உண்மையான பிரச்சினைகள் குறித்து அரசு விவாதிக்க வேண்டும். மேற்கு ஆசிய போர் குறித்தும் இந்திய - அமெரிக்க ஒப்பந்தம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு முன்வர வேண்டும்.

பிரதமர், நாடாளுமன்றத்துக்கு வராமல் தப்பிக்கிறார். அவரால் சபைக்கு வர முடியாது. இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். எந்த ஒரு விவகாரத்திலும் பிரதமர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டிய சூழ்நிலை வந்தால், அவர் முன்னே வராமல் பின்னுக்குச் செல்கிறார். அரசின் குறைகளை வெளிக்காட்டாமல் இருக்க எதிர்க்கட்சிகளின் குரலை அடக்க அரசு அனைத்து வழிகளையும் பயன்படுத்துகிறது’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT