புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் (டிச., 19) முடிவடைந்த நிலையில், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதையொட்டி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வந்தே மாதரம் விவகாரம், திருப்பரங்குன்றம் சர்ச்சை ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன.
குறிப்பாக, 20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மாற்றாக, புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடக்கம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பின்னர், நாட்டில் அணுமின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், அணுசக்தித் துறையை தனியாருக்கு திறந்துவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ‘இந்தியாவின் மாற்றத்துக்கான அணுசக்தி மேம்பாட்டு (சாந்தி) மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. மேலும், மக்களவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார்.
அவை கூடியதும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்ட பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், மாநிலங்களவையிலும் அவை ஒத்தி வைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்தார். இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.
இதையொட்டி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, திமுக எம்.பி.ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.