இந்தியா

துணை மானியக் கோரிக்கை: ரூ.41,455 கோடிக்கு மக்களவையில் ஒப்புதல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது ரூ.41,455 கோடி மதிப்பிலான துணை மானியக் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. 2 நாள் வார விடுமுறைக்குப் பிறகு நேற்று காலையில் மக்களவை கூடியது. ப்போது, டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக எழுப்பப்பட்ட முழக்கத்துக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸார் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினர். இந்த அமளியால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அவை கூடியபோது, சில மசோதாக்களை தாக்கல் செய்ய மக்களவைத் தலைவர் அனுமதி அளித்தார்.

ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதனால் அமளி நிலவியதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது துணை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது ரூ.41,455 கோடியிலான துணை மானியக் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஊரக வேலை உறுதி திட்டம்: இதற்கிடையே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை நீக்கிவிட்டு, `கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான வளர் இந்திய உறுதியளிப்புத் திட்டம்’ (விபி கிராம் ஜி) என்ற பெயரில் மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான மசோதா மக்களவையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக உயர் கல்வி ஆணையம் அமைக்கவகை செய்யும் மசோதாவை மத்தியகல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்அறிமுகம் செய்தார். ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட, நடைமுறையில் இல்லாத 71 சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவும் அறிமுகம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT