அபேஷ் பானர்ஜி
கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் படித்த முதுநிலை மருத்துவ மாணவி கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் காவல் துறை தன்னார்வலர் சஞ்சய் ராய்க்கு கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உள்ளது. இந்நிலையில் புதிய முதல்வர் சுவேந்து அதிகாரி, கொல்கத்தா மருத்துவ மாணவி வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டு உள்ளார்.
உயிரிழந்த மருத்துவ மாணவியின் தாய் ரத்னா தேவ்நாத் பானிஹாட்டி தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ளார். அவர் முன்னணி ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது மகள் கொலை வழக்கில் பானிஹாட்டி முன்னாள் எம்எல்ஏ நிர்மல் கோஷ், பானிஹாட்டி நகராட்சி தலைவர் சோம்நாத் தேவ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபேஷ் பானர்ஜிக்கு தொடர்பு உள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், எனது மகள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணிக்குள் கொலை செயயப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது.
அந்த நேரத்தில் மம்தாவின் மருமகன் அபேஷ் பானர்ஜியின் செல்போன் சிக்னல் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பதிவாகி இருக்கிறது. எனவே அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாணவியின் தந்தை சேகர் ரஞ்சன் தேவ்நாத் கூறும்போது, ‘‘மம்தாவின் அண்ணன் கார்த்திக் பானர்ஜியின் மகன் அபேஷ் பானர்ஜி. இவர் மருத்துவர் ஆவார். எனது மகள் கொலை நடந்த இடத்தில் அபேஷ் இருந்துள்ளார்.
அவரது உடலிலும் ஆடையிலும் ரத்தக் கறை ஏற்பட்டு உள்ளது. குற்றம் நடந்த இரவில் அப்போதைய கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயலுடன் மம்தா மொபைல்போனில் தொடர்பில் இருந்தார். அதன் பிறகு திட்டமிட்டு பல்வேறு தடயங்கள் அழிக்கப்பட்டு உள்ளன’’ என்றார்.