இந்தியா

பாதுகாப்புப் படைகளின் 13 வாட்ஸ்அப் குழுக்களில் பாக். உளவாளிகள் ஊடுருவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டிஆர்டிஓ விஞ்ஞானி போல நடித்த பெண் உளவு ஏஜென்ட் ஒருவர், பாதுகாப்பு தொடர்பான முக்கியத் தகவல்களைப் பெற்றதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்திய ராணுவம், மத்தியப் படைகளின் 13 வாட்ஸ்அப் குழுக்களில் பாகிஸ்தான் உளவு அமைப்பினர் ஊடுருவியிருப்பது தெரியவந்துள்ளது.

போலியான அல்லது ஹேக் செய்யப்பட்ட இந்திய செல்போன் எண்களைப் பயன்படுத்தியும், எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும் உறுப்பினர்களாகவும் உளவாளிகள் குழுக்களுக்குள் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அனைத்துப் படைப் பிரிவுகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், வாட்ஸ்அப் குழுக்களின் நிர்வாகிகள் தங்கள் குழுவில் உள்ள உறுப்பினர்களின் பட்டியலை உடனடியாகச் சரிபார்த்து, அடை யாளம் தெரியாத நபரையும் சந்தேகத்திற்குரிய எண்களையும் நீக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ராணுவத் தலைவர்களும் தளபதிகளும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ரகசியத் தகவல்களை எக்காரணம் கொண்டும் பகிரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, இதுகுறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களையும் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT