இடது: கவுரவ் கோகாய் | வலது: ஹிமந்த சர்மா
கவுகாத்தி: காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகோயுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியது பரபரப்பை உருவாக்கியது. இந்த நிலையில், ஹிமந்த சர்மா சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை மறைப்பதாகவும், தனது குழந்தைகளைக் கூட அவர் அரசியல் சர்ச்சையில் இழுப்பதாகவும் கவுரவ் கோகாய் விமர்சித்துள்ளார்.
அசாமில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது. இரண்டரை மணி நேர பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு, ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் பதிவில், கோகாயின் 2013 பாகிஸ்தான் பயணம் குறித்து கேள்வி எழுப்பினார். இந்தப் பயணத்தில் விசா அனுமதிகள் மற்றும் பயண இடங்கள் ஆகியவற்றில் முரண்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அவர், ‘கோகாயின் பாகிஸ்தான் விசா லாகூர், கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களுக்கு மட்டுமே பயணிக்க வெளிப்படையாக அனுமதித்திருந்தால், இஸ்லாமாபாத் தலைநகருக்கு வெளியே ராவல்பிண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள தக்ஷிலாவுக்கு அவர் எப்படிச் சென்றார்? சிறப்பு அனுமதி இல்லாமல் விசா வழங்கப்பட்ட நகரங்களுக்கு வெளியே பயணிக்க பாகிஸ்தானின் விதிகள் அனுமதிப்பதில்லை.
ராவல்பிண்டியில் பாகிஸ்தான் ராணுவத்தின் பொதுத் தலைமையகம் (GHQ) அமைந்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த விவகாரம் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால், கோகாயின் பயணத்துக்கு யார் வசதி செய்து கொடுத்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று கோரினார்.
மேலும், கோகாயின் மனைவி எலிசபெத் கோல்பர்ன் மற்றும் பாகிஸ்தான் நாட்டவரான அலி தௌகீர் ஷேக் ஆகியோருக்கு இடையே ஓர் ஆழமான தொடர்பு இருப்பதாக சர்மா குற்றம் சாட்டினார். கோகாயின் இந்தப் பயணத்தில் பாகிஸ்தானுக்கு முக்கியமான தகவல்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கவுகாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய், “இது குறித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை, பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறியதால் ஆறு மாதங்களாக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இது உண்மையிலேயே தேசிய பாதுகாப்பு பற்றியதாக இருந்திருந்தால், அவர் ஏன் ஆறு மாதங்களாக சும்மா இருந்தார்?
உண்மை என்னவென்றால், சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் அவரது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எதுவும் இல்லை.
அசாமில் காங்கிரஸ் கட்சியின் அதிகரித்து வரும் செல்வாக்கு காரணமாக அவர் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார். ஹிமந்த பிஸ்வா சர்மாவின் குடும்பத்தினரிடம் 12,000 பிகா நிலம் இருப்பதாக நாங்கள் அம்பலப்படுத்திய பின்னர்தான், அவர் இந்த நாடகத்தை அரங்கேற்றினார்.
என் மனைவி வேலை சம்பந்தமாக பாகிஸ்தானுக்குச் சென்றார். 2013-ல் 10 நாள் பயணமாக நான் அவருடன் சென்றேன். அதில் ரகசியமானதோ அல்லது சட்டவிரோதமானதோ எதுவும் இல்லை. முதல் நாளிலிருந்தே, சிறப்புப் புலனாய்வுக் குழு தனது வேலையைச் செய்ய வேண்டும் என்றும், அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும் என்றும் நான் கூறி வருகிறேன். முதலமைச்சர் ஒன்றும் சாணக்கியர் அல்ல.
சர்மாவின் பேச்சில் அவர் என் மைனர் குழந்தைகளைப் பற்றியும் பேசும் அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டார். அவருடைய குழந்தைகளைப் பற்றியும் எங்களுக்குத் தெரியும். அனைவருக்கும் தெரியும். ஆனால் நாங்கள் குடும்பங்களை அரசியலில் இழுப்பதில்லை. இந்தச் சம்பவம் அசாமுக்கு ஓர் அவமானம். என் மைனர் குழந்தைகளைப் பற்றி கருத்து தெரிவித்ததற்காக முதல்வர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்.
ஹிமந்த சர்மா குடும்பம் அசாம் முழுவதும் 12,000 பிகாக்கள் (4,000 ஏக்கர்) மதிப்புமிக்க நிலத்தை எப்படிப் பெற்றார்கள் என்பதை அவர் விளக்க வேண்டும். மக்களுக்கு எல்லாம் புரிகிறது. உண்மை எது, வெறும் அரசியல் நாடகம் எது என்பதை அவர்கள் அறிவார்கள்" என்று அவர் கூறினார்.