புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில் 66 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப் பணி, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இதன்படி நடப்பு 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக 131 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் 66 பேருக்கு நேற்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 66 பேருக்கும் விருதுகளை வழங்கினார்.
சென்னை இசை கலைஞர் ராஜம்: மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சிங் தியோலுக்கு பத்ம விபூஷண் வழங்கப்பட்டது. அவரது சார்பாக அவரது மனைவி நடிகை ஹேமமாலினி எம்.பி. விருதினை பெற்றுக் கொண்டார். சென்னையைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் என். ராஜம், பத்ம விபூஷண் விருதினை பெற்றுக் கொண்டார்.
கர்நாடகாவை சேர்ந்த கணேஷ், உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் பகத்சிங் கோஸ்யாரி, மகாராஷ்டிராவை சேர்ந்த தொழிலதிபர் உதய் சுரேஷ்குமார் கோனக், இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவர் வி.கே. மல்கோத்ரா (மறைவு), சென்னையை சேர்ந்த மூத்த மருத்துவர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, மகாராஷ்டிராவை சேர்ந்த விளம்பர துறை நிபுணர் பியூஷ் பாண்டே (மறைவு) ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டது.
பத்ம ஸ்ரீ விருதுகள்: பிஹாரை சேர்ந்த நாட்டுப்புற நடனக் கலைஞர் விஷ்வ பந்து (மறைவு), பிஹாரை சேர்ந்த நாட்டுப்புற பாடகர் பரத் சிங் பார்தி, இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், குஜராத்தி மொழி எழுத்தாளர் ரத்திலால் போரிசாகர், மேற்குவங்கத்தை சேர்ந்த தபேலா கலைஞர் குமார் போஸ், ராஜஸ்தானை சேர்ந்த ஆன்மிக தலைவர் சுவாமி பிரகாம் தேவ், கேரளாவை சேர்ந்த சமூக சேவகர் தேவகி அம்மாள் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்: முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே, மகாராஷ்டிராவை சேர்ந்த நாட்டுப்புற இசைக் கலைஞர் ரகுவீர் கேத்கர், தமிழகத்தின் நீலகிரியைச் சேர்ந்த கிருஷ்ணன் (மறைவு), ஜெர்மனியை சேர்ந்த இசை ஆய்வாளர் லார்ஸ் கிறிஸ்டியன் கோச், யுஜிசி முன்னாள் வேந்தர் ஜெகதீஷ் குமார், தமிழக காவல் துறை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், மேற்குவங்கத்தை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் ஹரிமாதவ் முகோபாத்யாய், மகாராஷ்டிராவை சேர்ந்த தொழிலதிபர் சத்யநாராயண் நந்தலால் நுவால், புதுச்சேரியை சிலம்பம் வீரர் பழனிவேல், தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சிவசங்கரி, சமூக வானொலியின் தந்தை என்றழைக்கப்படும் ஸ்ரீதர், ஓதுவார் சுவாமிநாதன் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதினை பெற்றுக் கொண்டனர்.