இந்தியா

“எங்கள் கூட்டணியின் உ.பி. முதல்வர் வேட்பாளர் சந்திரசேகர ஆசாத்” - ஒவைசி அறிவிப்பு

மோகன் கணபதி

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள ‘சமாஜிக் பரிவர்த்தன் மோர்ச்சா’ என்ற தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் சந்திரசேகர ஆசாத் என்று அசாதுதீன் ஒவைசி அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி தலைமையில் ஒரு கூட்டணியும் களத்தில் உள்ளன. இந்நிலையில், மூன்றாவதாக சமாஜிக் பரிவர்தன் மோர்ச்சா என்ற கூட்டணி புதிதாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை ஆசாத் சமாஜ் (கான்ஷிராம்) கட்சியின் தலைவர் சந்திரசேகர ஆசாத்தும், அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசியும் இணைந்து லக்னோவில் கூட்டாக வெளியிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒவைசி, “நாங்கள் சமாஜிக் பரிவர்த்தன் மோர்ச்சாவை உருவாக்க முடிவு செய்துள்ளோம். உத்தரப் பிரதேசத்தில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்கான ஒரு வலிமையான கூட்டணியாக இது இருக்கும்.

சமாஜிக் பரிவர்த்தன் மோர்ச்சா கூட்டணியின் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் சந்திரசேகர ஆசாத் இருப்பார். இந்தக் கூட்டணி சாதி வேறுபாடின்றி பிற்படுத்தப்பட்டோர், தலித் சமூகத்தினர் மற்றும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சந்திரசேகர ஆசாத், “இது ஒரு மூன்றாவது அணி அல்ல. மாறாக சமூக மாற்றத்துக்கான ஒரு முன்னணி. எங்கள் கூட்டணி களத்தில் வலுவாக உள்ளது. மேலும், இது இன்னும் வலிமையடையும். இது ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, விளிம்புநிலை மற்றும் சுரண்டலுக்கு உள்ளான மக்கள் மற்றும் குழுக்களின் கூட்டணியாகும்.

உத்தரப் பிரதேசத்தில் வறுமையை ஒழிப்பதும், சாதி அடிப்படையிலான வன்முறை மற்றும் ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுமே எங்கள் வாக்குறுதி. ஏழைகளையும் விளிம்புநிலை சமூகக் குழுக்களையும் மேம்படுத்துவதாகவும், அவர்களை முதன்மை நீரோட்டத்துக்குக் கொண்டு வருவதாகவும் பேசியவர்கள், பிற்காலத்தில் எம்எல்ஏக்களாகவும், எம்பிக்களாகவும், முதல்வர்களாகவும், ஏன் பிரதமர்களாகவும் உயர்ந்தனர்.

ஆனால், விளிம்புநிலைச் சமூகங்கள் இன்றும் அதே நிலையில்தான் உள்ளன. இன்றும்கூட உத்தரப் பிரதேசத்தில் அடிப்படை வசதிகள் கட கிடைக்கப் பெறாமல் அவர்கள் உள்ளனர். மேலும், அவர்கள் புல்டோசர் ராஜ் மூலம் அநீதிக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் ஆல்லது வேறு எந்த கட்சியாவது எங்களுடன் இணைய விரும்பினால், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT