இந்தியா

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி நாடு முழுவதும் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் பதிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி, தமிழகத்தில் 8,252, புதுச்சேரியில் 620 உட்பட நாடு முழுவதும் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் முறைப்படி பதிவு செய்யப்பட்டுஉள்ளன.

முஸ்லிம் மத நோக்கங்கள், தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்படும் அசையும், அசையா சொத்துகள் ‘வக்பு’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சொத்துகளை நிர்வகிக்க கடந்த 1954-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 1995-ம் ஆண்டில் வக்பு சட்டத்தில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

இந்த சூழலில் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, நாடுமுழுவதும் உள்ள வக்பு சொத்துகளை பதிவு செய்ய ‘உமீத்’ என்ற இணையதளம் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. 6 மாதங்களில் அனைத்து வக்பு சொத்துகளையும் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்படி டிசம்பர் 6-ம் தேதியுடன் 6 மாத அவகாசம் நிறைவடைந்தது.

இந்நிலையில், மத்திய சிறுபான்மையினர் நலத் துறை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தற்போதைய புள்ளிவிவரங்களின்படி நாடு முழுவதும் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் உமீத் தளத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. 2.17 லட்சம் சொத்துகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2.14 லட்சம் சொத்துகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு கட்ட ஆய்வுகளின்போது 10,869 சொத்து பதிவுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 86,345 வக்பு சொத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்து மகாராஷ்டிராவில் 62,939, கர்நாடகாவில் 58,328, தெலங்கானாவில் 46,480, கேரளாவில் 42,772 வக்பு சொத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 8,252 சொத்துகள் தமிழகத்தில் 8,252, புதுச்சேரியில் 620 வக்பு சொத்துகள் உமீத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வக்பு சொத்துகளை பதிவு செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படாது. எனினும் இதுவரை பதிவு செய்யப்படாத வக்பு சொத்துகள் குறித்து வக்பு தீர்ப்பாயத்தை அணுகி நிவாரணம் பெறலாம். நியாயமான காரணங்கள் இருந்தால் 6 மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT