கோப்புப் படம்
புதுடெல்லி: அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாக தேசியப் பாடலான வந்தே மாதரம் கட்டாயம் இசைக்க வேண்டும். அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்கமொழி கவிஞர் பக்கிம் சந்திர சட்டர்ஜி கடந்த 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலை இயற்றினார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இப்பாடல் மிகப்பெரிய உத்வேகம் அளித்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி வந்தே மாதரம் தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை மத்திய அரசு கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் வந்தே மாதரம் பாடலுக்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் (ஜன கன மன) இசைக்கப்படுவதற்கு முன்னதாக தேசியப் பாடலான வந்தே மாதரம் கட்டாயம் இசைக்க வேண்டும்.
கடந்த 1937-ல் நீக்கப்பட்ட 4 வரிகள் உட்பட வந்தே மாதரத்தின் அனைத்து 6 சரணங்களும் பாடப்பட வேண்டும். இது 3 நிமிடம், 10 வினாடிகள் நீளமுடையதாக இருக்கும். குடியரசுத் தலைவர், ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், பத்ம விருதுகள் உள்ளிட்ட அரசு விருது வழங்கும் நிகழ்ச்சிகள், தேசியக் கொடி ஏற்று தல் போன்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் தேசியப் பாடல் பாடப்பட வேண்டும்.
வந்தே மாதரம் பாடும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். தேசியப் பாடல் பாடப்படும் சபை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். வந்தே மாதரம் பாடும் போது அல்லது இசைக்கப்படும் போது, பார்வையாளர்கள் எழுந்து நிற்பது கட்டாயம் என்றாலும் திரையரங்குகளில் செய்திப் படம் அல்லது ஆவணப் படத்தின் ஒரு பகுதியாக தேசியப் பாடல் இசைக்கப்படும் போது, பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஏனெனில் இதனால் படத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் தேசியப் பாடலின் கண்ணியத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக குழப்பத்தை உருவாக்கும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி 1937-ல் நீக்கப்பட்ட வந்தே மாதரம் பாடலின் வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தாய் நாட்டை லட்சுமி, சரஸ்வதி, துர்கையுடன் ஒப்பிடும் வரிகளும் இனி இசைக்கப்படும். தேசிய கீதத்தை பாடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் சட்டப்பூர்வமாக வகுக்கப்பட்டுள்ளன. அதுபோல் தற்போது வந்தே மாதரம் பாடலுக்கும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலை அவமரியாதை செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.