இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் புதிய அணை கட்டுவது தொடர்பாக முன்மொழியப்பட்ட திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் இன்று (அக்.26) அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் (Upper Subansiri District) நடைபெற்றது. அப்போது அங்கு சில இடங்களில் வன்முறை வெடித்தது.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை அன்று சியாங் ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பான திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்று நடைபெற்ற போராட்டமும் வன்முறையில் முடிந்தது.
இதையடுத்தே சுபன்சிரி ஆற்றில் நீர் மின் திட்டம் மூலம் மின்சார உற்பத்தி செய்வதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுபன்சிரி மாவட்டத்தில் இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டது.
ஏ.டி.எஸ்.யூ மாணவர் அமைப்பு மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை அறிவித்தன. கடந்த சனிக்கிழமை இரவு ஏ.டி.எஸ்.யூ மாணவர் அமைப்பின் தலைவர் தடக் பக்பாவை போலீஸார் கைது செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுவே இந்த போராட்டம் வன்முறையாக மாற காரணம் என்று தகவல் கிடைத்துள்ளது.
இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில், அதற்கு தீ வைத்தும், சூறையாடியும் உள்ளனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அதன் காரணமாக போலீஸார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுவே இந்த போராட்டம் வன்முறையில் முடிய காரணம் என்று மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சுபன்சிரி ஆற்றில் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தை கைவிட வேண்டும் என அரசை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்வாதார பாதிப்பு மற்றும் பாரம்பரிய மக்களின் உரிமை இதனால் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியா மற்றும் சீனாவின் எல்லை பகுதியில் இந்த சுபன்சிரி மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்கு பகுதி எல்லையில் சீனா அமைந்துள்ளது. இங்குதான் இந்திய எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்குள் அண்மையில் அத்துமீறி சீன ராணுவ வீரர்கள் ஊடுருவியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.