சண்டிகர்: சண்டிகர் யூனியன் பிரதேசத்துக்கு தனி நிர்வாக அதிகாரியை நியமிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சண்டிகர் யூனியன் பிரதேசமாக இருந்தாலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரமாகவும் விளங்குகிறது. அதேநேரம், பஞ்சாப் ஆளுநர் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், வரும் டிச.1-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதில், அரசியல் சாசன (131-வது திருத்த) மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டிகர் யூனியன் பிரதேசத்துக்கு மற்ற யூனியன் பிரதேசங்களில் உள்ளது போல தனி நிர்வாக அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், ஷிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் எக்ஸ் தள பதிவில், “சண்டிகர் மீதான பஞ்சாபின் உரிமையை பறிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த முடிவு பஞ்சாப் மாநில அடையாளத்தின் மீதும் அரசியல் சாசன உரிமை மீதும் நேரடியாக நடத்தப்படும் தாக்குதல் ஆகும். இந்த முடிவை கைவிட வேண்டும்’’ என கூறியுள்ளார்.
இதுபோல அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறும்போது, “எந்த ஒரு சர்வாதிகாரி முன்பும் பஞ்சாபியர்கள் தலைவணங்க மாட்டார்கள் என்பதை வரலாறு சொல்லும். சண்டிகர் பஞ்சாப் மாநிலத்துக்கு சொந்தமானது’’ என்றார்.
இந்நிலையில், மத்திய உள் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சண்டிகர் யூனியன் பிரதேசத்துக்கான, மத்திய அரசின் சட்டம் இயற்றும் செயல்முறையை எளிமைப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
அதேநேரம் சண்டிகரின் பாரம்பரிய நிர்வாக கட்டமைப்பை மாற்றும் நோக்கம் இல்லை. சண்டிகரின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அனைவருடனும் ஆலோசனை நடத்திய பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இது தொடர்பாக எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட மாட்டாது’’ என கூறப்பட்டுள்ளது.