இந்தியா

நாடாளுமன்ற முடக்கம்: ஓம் பிர்லா கவலையும், கார்கே முன்வைத்த 3 நிபந்தனைகளும்

அனலி

புதுடெல்லி: நாடாளுமன்ற தொடர் முடக்கம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கவலை தெரிவித்த நிலையில், நாடாளுமன்றம் சுமுகமாக இயங்க எதிர்க்கட்சிகளின் மூன்று கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்ற முடக்கம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், “உறுப்பினர்களே, கேள்வி நேரம் என்பது அவையின் மிக முக்கியமான நடவடிக்கைகள் அரங்கேறும் நேரம். இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன். கேள்வி நேரத்தில் அதற்கான அலுவல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதையும் நான் தெரிவித்திருக்கிறேன். அதனால் கேள்வி நேரத்தை சமுகமாக நடத்த ஒத்துழையுங்கள்.

அவை சுமுகமாக நடைபெறுவதையே நாட்டின் மக்களும் விரும்புகின்றனர். நேற்று நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்திலும் நான் உறுப்பினர்கள் அனைவரிடமும் அவையை நடத்த ஒத்துழைப்பு தருமாறு வேண்டினேன். நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான மசோதாக்கள் விவாதத்துக்கு காத்திருக்கின்றன. அவற்றின் மீது ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவது அவசியம்.

மாணவர்கள் போராட்டம் குறித்து அவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறார் என்பதையும் நேற்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கூறியிருந்தார். இந்த நிலையில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அவையை சுமுகமாக நடத்த ஒருமித்த கருத்தை எட்டவேண்டும்” என்று கூறியிருந்தார்.

கார்கே எதிர்வினை:

இந்நிலையில், நாடாளுமன்ற முடக்கம் குறித்துப் பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”எதிர்க்கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எங்களுக்கு மூன்று குறிப்பிட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. முதலாவது டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மாணவர்கள் மீது நடந்த தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பானது. அந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டது யார் என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும். அதன் நிமித்தமாக அவையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.

அதேபோல், தடியடியில் நிறைய மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.100-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. ஒருசிலருக்கு பெல்லட் குண்டுகளால் பாதிப்பு ஏற்பட்டது. இதன் நிமித்தமாகவும் அவையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.

18 நாட்கள் ஆகியும் கூட இதில் விளக்கம் அளிக்க அரசிடம் இருந்து எவ்வித ஆர்வமும் காட்டப்படவில்லை. மாறாக ஏதேனும் கருத்துகளை அவசர கோலத்தில் அள்ளித் தெளித்துவிட்டு ஓடிவிடுகின்றனர்.

இரண்டாவதாக ராமர் கோயில் காணிக்கை திருட்டு குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும். மூன்றாவதாக, மாணவர்கள் மீதான தடியடி, துப்பாக்கிச் சூடு மற்றும் காணிக்கை திருட்டு விவகாரங்கள் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும்.

நாடாளுமன்றம் கூடியதில் இருந்தே இந்த மூன்று கோரிக்கைகளை தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அவை இப்போதும் பொருத்தமானதாவே இருக்கின்றன.” என்றார்.

ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம் குறித்த கேள்விக்கு, “அது தனி விவகாரம். அதை தனியாகப் பேச வேண்டும்,” என்றார்.

நாடாளுமன்ற முடக்கத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தான் காரணம் என்று நேற்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“இந்த தேசம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழக்கமான உரைகளின் மீது அக்கறை கொண்டிருக்கவில்லை. மாறாக, டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பதையே அறிய விரும்புகிறது” என்று ராகுல் காந்தி நேற்று கூறியிருந்தார்.

SCROLL FOR NEXT