ஞானேஷ் குமார்

 
இந்தியா

ஞானேஷ் குமார் விவகாரத்தில் ஒன்றிணையும் எதிர்கட்சிகள்: அடுத்த வாரம் இண்டியா கூட்டணி கூட்டம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணையத் துவங்கி உள்ளன. இது தொடர்பாக அடுத்த வாரம் இண்டியா கூட்டணியின் கூட்டம் நடைபெறவுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை விமர்சித்து வந்த எதிர்க்கட்சிகள், இப்போது அவருக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளன. இதனால், ஞானேஷ் குமார் விவகாரம் தொடர்பான சர்ச்சை மேலும் தீவிரம் அடைகிறது. இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் மீண்டும் ஒன்றிணையத் துவங்கி உள்ளன. இது தொடர்பாக அடுத்த வாரம் எதிர்க்கட்சிகளின் முக்கியக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் மம்தா முதல் இடதுசாரிகள் வரை அனைவரும் ஒன்றிணைந்து கலந்துகொள்ள உள்ளனர். தேர்தல் ஆணைய விவகாரம் குறித்து மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் ராகுல் காந்தியுடன் பேசியுள்ளனர். மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபியும் மம்தா பானர்ஜியுடன் இதுகுறித்துப் பேசியுள்ளார்.

ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் மூத்த தலைவர்கள் இது குறித்துத் தொடர்பில் உள்ளனர்.

குறிப்பாக, தமிழகத்தில் விஜய் ஆட்சிக்கான ஆதரவால் இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய திமுகவும் தொடர்பில் வந்திருக்கிறது. இதையடுத்து, மீண்டும் இண்டியா கூட்டணியில் திமுக சேருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஞானேஷ் குமார் மீது புகார்களை முன்வைக்க, அடுத்த வாரம் கூட்டணிக் கூட்டம் மற்றும் கூட்டுச் செய்தியாளர் சந்திப்புக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

வரும் செவ்வாய்க்கிழமையன்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்தும், ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துவதற்கான உத்திகள் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT