இந்தியா

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர் துவார் என்ற இடத்தில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி மற்றும் சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அயோத்தியில் காணிக்கை திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை குறிக்கும் வகையில், அங்கு வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டியில் எம்.பி.க்கள் பணத்தை செலுத்துவது போல் செலுத்தி விட்டு பின்னர் அதை திருடுவது போல் செய்து காட்டினர். மேலும், நீட் தேர்வை கண்டித்து அண்மையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில், அவர்கள் மீது காவல்துறை நடத்திய கொடூர தாக்குதலையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

குறிப்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்துக்கு ஏன் வரவில்லை என்ற வாசகங்கள் இடம் பெற்ற பாதாகைகளை கையில் ஏந்தி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை, நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடக போராட்டம் நடத்தினர். இதில், ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் காணிக்கைப் பெட்டிகளில் பணம் செலுத்திய நிலையில், காவி நிற உடை அணிந்திருந்த ராஜேஷ் ரஞ்சன் எனும் பப்பு யாதவ் அந்தப் பணத்தை தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்வது போல நடித்தார். இதன் மூலம், ராமர் கோயிலில் காணிக்கைத் தொகை திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

இந்தப் போராட்டத்துக்கு பாஜக மற்றும் பல இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது சனாதன தர்மத்தை அவமதிக்கும் செயல் என்று அவை குற்றம்சாட்டியுள்ளன. இதற்கிடையில், இந்த வார நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பின்பற்ற வேண்டிய வியூகத்தை இறுதி செய்யும் நோக்கில், காங்கிரஸ் கட்சி தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு, எக்ஸ் தளத்தில் கார்கே வெளியிட்ட பதிவில், “மாணவர்கள் மீது தடியடி மற்றும் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். பிரதமரின் மேற்பார்வையில் செயல்படும் ஸ்ரீ ராமர் கோயில் அறக்கட்டளையின் கீழ் இருந்தபோதும், பக்தர்கள் வழங்கிய காணிக்கை எவ்வாறு திருடப்பட்டது என்பது குறித்தும் பிரதமர் பதிலளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT