ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி
புதுடெல்லி: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்துத்துவப் பாதையை நோக்கித் திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.
முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி குஜராத்தின் சோமநாத்தில் தொடங்கி அயோத்தி வரை ‘ராம் ரத யாத்திரை’யை 1990-ல் முதல்முறையாக நடத்தினார். இதன்மூலம், இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார் அத்வானி.
இதன்மூலம் பாஜக முதன்முதலில் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் நிலையை எட்டியது. உ.பி.யிலும் தனி மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைத்தது. இதன் காரணமாக இந்துத்துவா அரசியல், தேர்தல் காலங்களில் கட்டாயமாகி விட்டது. இப்போக்கு தற்போது எதிர்க்கட்சிகளிடமும் காணப்படுகிறது. உ.பி.யில் தனது சொந்த ஊரான எட்டாவாவில், சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ், கேதார்நாத் வடிவில் கோயிலை கட்டுகிறார். முதன்முறையாக அயோத்தி ராமர் கோயிலுக்கு டிசம்பர் 12-ல் செல்லப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தியும் அவ்வப்போது ஏதாவது ஒரு கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். பிரியங்கா வதேராவும் கோயில்களுக்கு செல்லத் தவறுவதில்லை. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள், மதமும் கோயில்களும் தங்கள் தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று அடிக்கடி வலியுறுத்துகின்றனர். திக்விஜய் சிங் போன்ற காங்கிரஸ் தலைவர்கள், மதம் மீது எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஏகபோக உரிமை இல்லை’ என்றும் வாதிடுகின்றனர்.
மம்தா பானர்ஜி, திகா நகரில் ஜெகந்நாதர் கோயில் கட்டுவதை ஆதரித்திருந்தார். எதிர்க்கட்சிகளும் இந்துத்துவத்தை நோக்கிச் செல்வது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு எதிர்க்கட்சிகளை பாஜக, ‘இந்து எதிர்ப்பாளர்கள்’ எனக் குற்றம் சாட்டுவதே காரணம். இந்த பிம்பத்தை மாற்றவே எதிர்க்கட்சிகள் கோயில்களுடன் தங்களை இணைத்துக்கொள்ள முயல்வதாகக் கருதப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை ‘தேர்தல் கால இந்துத்துவம்’ என்கிறது பாஜக.