இந்தியா

எஸ்ஐஆர் விவகாரத்தைக் கிளப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய மகளிர் கபடி அணி ஆகியவற்றுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அமைதி காக்குமாறு அவைத்தலைவர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடியபோது, மணிப்பூர் ஜிஎஸ்டி சீர்திருத்த மசோதா, புகையிலைப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா ஆகியவற்றை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்படி, புகையிலைப் பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது. சிகரெட் மீதான கலால் வரி 2 மடங்காக அதிகரிக்கப்பட உள்ளது.

மசோதாக்களை அமைச்சர் தாக்கல் செய்து பேசியபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியபோது, மணிப்பூர் ஜிஎஸ்டி திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போதும் எஸ்ஐஆர் பணியைக் கண்டித்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணமூல் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் வெளிநடப்பு: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முறையாக நேற்று மாநிலங்களவையை வழிநடத்தினார். இதையொட்டி, அவையின் சார்பில் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்திப் பேசினர்.

பிறகு, பிற்பகலில் மாநிலங்களவை கூடியபோது, எஸ்ஐஆர் பணி குறித்து அவையில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டனர்.

‘‘எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், உடனடியாக விவாதம் நடத்துமாறு நிர்ப்பந்தம் செய்யக் கூடாது’’ என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பிரதமர் மோடி அறிவுரை: கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் பேசியதாவது: குளிர்கால கூட்டத்தொடர் வெறும் சடங்காக மாறிவிடக் கூடாது. நாட்டின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் சிறப்பு கூட்டத்தொடராக அமைய வேண்டும்.

சமீபத்தில் நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுவடைந்துள்ளது. இந்தியாவின் ஜனநாயகத்தையும், அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியையும் பார்த்து உலக நாடுகள் வியப்பில் ஆழ்ந்துள்ளன.

பெரும்பாலும் தேர்தல்களுக்கான களமாகவோ அல்லது தேர்தல் தோல்விக்குப் பிறகு விரக்தியை வெளிப்படுத்தும் இடமாகவோ நாடாளுமன்றம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறையை மக்கள் ஏற்பது இல்லை. தேர்தல் தோல்வி விரக்தியால் நாடாளுமன்றத்தை முடக்கக் கூடாது. அதேநேரம், தேர்தல் வெற்றியின் ஆணவமும் இருக்கவே கூடாது. குளிர்கால கூட்டத்தொடர் சமநிலையுடன் இருக்க வேண்டும். அவையின் மாண்பை அனைத்து உறுப்பினர்களும் காப்பாற்ற வேண்டும்.

நாடாளுமன்றத்தில் நாடகம் நடத்தக்கூடாது. வெற்று கோஷம் எழுப்பக்கூடாது. எதிர்ப்பு, எதிர்மறை என்பதெல்லாம் அரசியலுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால், நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும்போது நேர்மறை சிந்தனைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்களது ஜனநாயகக் கடமையை உணர வேண்டும். நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு ஆக்கப்பூர்வமான விஷயங்கள் குறித்து மட்டுமே பேச வேண்டும். முக்கியமான, அர்த்தமுள்ள பிரச்சினைகளை மட்டுமே அவையில் எழுப்ப வேண்டும்.

எதிர்க்கட்சிகள் தங்கள் அணுகுமுறை, உத்தியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிறப்பாக செயல்படுவது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க தயாராக உள்ளேன்.

முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எம்.பி.க்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகள், நாட்டின் வளர்ச்சி குறித்து பேச அனைத்து கட்சிகளும் உரிய வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் கூறினார்.

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புகழாரம்: நாட்டின் 15-வது குடியரசு துணைத்தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், மாநிலங்களவைக்கு அவர் முதல்முறையாக தலைமை தாங்கினார். அவருக்கு வாழ்த்து தெரி வித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது:

மாநிலங்களவைக்கு முதல்முறையாக தலைமை தாங்கும் தங்களுக்கு வாழ்த்துகள். அரசியல் என்பது உங்கள் பயணத்தின் ஒரு பகுதிதான். இளைஞராக இருந்தது முதல் தற்போது வரை சமூக சேவைதான் தங்களது முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. மிக எளிமையான வாழ்க்கையில் இருந்து நீங்கள் உயர் பதவிக்கு வந்திருப்பது நமது ஜனநாயகத்தின் வலிமையை காட்டுகிறது. உங்களது பணிவான தோற்றமானது சேவை, அர்ப்பணிப்பு, பொறுமையைப் பிரதிபலிக்கிறது.

குழந்தைப் பருவத்தில் நீங்கள் எதிர்பாராதவிதமாக அவிநாசி கோயில் குளத்தில் மூழ்கினீர்கள். ‘நான் மூழ்கியது மர்மமாகவே இருந்தது. என்னை யார் காப்பாற்றினார்கள்? எப்படி காப்பாற்றப்பட்டேன்? எதுவுமே எனக்கு தெரியாது. ஆனால் உயிர் பிழைத்தேன்’ என்று கூறியுள்ளீர்கள். அதேபோல, கோவையில் அத்வானி ரதயாத்திரையின்போது நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 60-70 பேர் கொல்லப்பட்ட நேரத்தில், நீங்கள் நூலிழையில் உயிர் தப்பினீர்கள். இந்த இரு சம்பவங்களிலும் இறைவன் அருள் இருப்பது தெளிவாக தெரிகிறது.

முதல்முறையாக காசிக்கு சென்று கங்கை அன்னையின் ஆசியை பெற்ற போது, ​​இனி அசைவம் சாப்பிட மாட்டேன் என்று சபதம் ஏற்றீர்கள். வாராணசி எம்.பி. என்ற வகையில் இந்த சம்பவம் எப்போதும் எனது நினைவில் இருக்கும்.

எந்த பொறுப்பை வழங்கினாலும், திறம்படச் செய்யக்கூடியவர். உங்களது பயணம் ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஊக்கம் தருகிறது. அவையின் பாரம்பரியத்தையும், தலைவரின் கவுரவத்துக்கும் அனைத்து உறுப்பினர்களும் மதிப்பளிப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

SCROLL FOR NEXT