இந்தியா

ராகுல் காந்தியை பேச அனுமதிக்கக் கோரி அமளி - மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: ராகுல் காந்தியை பேச அனுமதிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 9-வது நாளான இன்று, மக்களவை வழக்கம்போல் காலை 11 மணிக்குக் கூடியது. அவை கூடிய சில நிமிடங்களிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவையில் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரம் முடிந்த பிறகு விதிகளின்படி அனைவரும் பேச அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார். மேலும், பட்ஜெட் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் தனது கருத்துகளை முன்வைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

          

இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அவை 12 மணிக்குக் கூடியபோதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவையில் முழக்கங்களை எழுப்பினர். இதனால், அவையை 2 மணிக்கு ஒத்திவைப்பதாக அவையை நடத்திய கிருஷ்ண பிரசாத் தென்னேட்டி அறிவித்தார்.

அவைத் தலைமைப் பொறுப்பில் இருந்த சந்தியா ராய் தலைமையில் அவை மீண்டும் 2 மணிக்கு கூடியது. அப்போது, பட்ஜெட் குறித்து பேச காங்கிரஸ் எம்.பி சசி தரூருக்கு சந்தியா ராய் அழைப்பு விடுத்தார். சிறிது நேரம் பேசிய சசி தரூர், ராகுல் காந்திக்கு தனது வாய்ப்பை வழங்கினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, தான் சபாநாயகரிடம் சென்றதாகவும், அவையில் பேச சபாநாயகர் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். ஆனால், அவையில் பேச ராகுல் காந்திக்கு சபாநாயகர் அனுமதி அளிப்பதாக உறுதி அளிக்கவில்லை என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இதையடுத்து, அவையில் அமளி ஏற்பட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி வதேரா, ‘‘நாங்கள் சபைக்குச் சென்றுவிட்டு சும்மா வெளியே வருகிறோம். இது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு ஒரு நிமிடம் கூட அனுமதி அளிக்கப்படவில்லை. இது கேலிக்கூத்தானது. இது ஜனநாயகம் அல்ல. நாங்கள் எதற்காக இங்கு வருகிறோம்? அவரைப் பேச அனுமதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT