புதுடெல்லி: நாடாளுமன்றத்துக்கு இன்று (ஜூலை 22) எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற சிஜேபி கட்சியினர், ஆதரவாளர்களுக்கும் காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அது மாணவர்களுக்கு எதிரான வன்முறையில் முடிந்தது.
இந்நிலையில், நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் பிரதமர் இல்லத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்துக்கு இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கருப்புச் சட்டை அணிந்துவந்தனர்.
தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, “நாட்டில் கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.14 லட்சம் கோடி. ஆனால் அதானி, அம்பானியின் கடன் தள்ளுபடி ரூ.16 லட்சம் கோடி. மாணவர்கள் போராட்டத்துக்கு உண்மையான காரணம் இருக்கிறது. அவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
வினாத்தாள் கசிவு என்பது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. அமைதியான போராட்டத்தில் எவ்வித ஜனநாயக மீறலும் இல்லை. ஆனால், மாணவர்கள் மீதான வன்முறை நியாயமல்ல. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லாமல் போய்விட்டது” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இது ஜனநாயகமான அரசு இல்லை என்று நான் நேற்றே கூறினேன். அவர்கள் சர்வாதிகாரிகள் போல் செயல்படுகின்றனர். எம்பிக்கள் மீது எந்த மரியாதையும் இல்லை. சட்டப் போராட்டங்களை கூட ஒடுக்குகின்றனர்.
பாஜக ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் பேட்ஜ் இல்லாத போலீஸாக செயல்படுகின்றனர். மாணவர்களை அச்சுறுத்தியுள்ளனர். எங்களது மூத்த தலைவர்களை நீங்கள் நசுக்க நினைத்தால் லட்சக்கணக்கானோர் திரண்டு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். உங்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நாங்கள் தொடர்ந்து போராடப் போகிறோம். ராகுல், பிரியங்காவுக்கு நீங்கள் செய்த காரியத்துக்கு வருந்துவீர்கள்” என்றார்.
மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு:
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. முதலில் 12 மணி வரையிலும் பின்னர் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை இன்று கூடியதுமே, காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால், நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் போராட்டம் மீதான காவல் துறை அடக்குமுறை விவகாரங்களை எழுப்பினார். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து அரசு விவாதத்துக்கு தயாராக இருக்கிறது. என்ன மாதிரியான விவாதம், எப்போது நடத்தலாம் என்பதை அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றார்.
அதற்கு அகிலேஷ் யாதவ், “இது அரசியல் கட்சிகளின் விவகாரம் அல்ல. இது இளைஞர்களின் எதிர்காலம் சார்ந்தது. இதில் ஏன் பிரதமர் மோடி விளக்கமளிக்கக் கூடாது? நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசுபவர் உள்ளேயும் பேசலாமே” என்றார். மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.