புதுடெல்லி: மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியாத மையின் தரம் குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மக்களை தேர்தல் ஆணையம் தவறாக வழிநடத்துவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “அடையாள மையை அழிக்க முடியும் என எதிர்க்கட்சியினரும் வாக்காளர்களும் முறையிடுகின்றனர். தேர்தல் ஆணையம் மக்களை தேர்தல் ஆணையம் தவறாக வழிநடத்துவதுதான் நமது ஜனநாயகத்தில் நம்பிக்கை சரிந்துபோனதற்கு காரணம். வாக்குத் திருட்டு ஒரு தேச விரோத செயல்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வாக்காளர் விரலில் இடப்பட்ட அடையாள மையை எளிதில் அகற்ற முடியும் என்றும், இது கள்ள ஓட்டுக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நிராகரித்த போதிலும், அசிட்டோன் போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்தி மையை எவ்வாறு அகற்றலாம் என்பதை காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.
இதையடுத்து, ‘இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மார்க்கர் பேனாக்களில் உள்ள அழியாத மையின் தரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். வரவிருக்கும் மாவட்ட ஊராட்சி தேர்தலில் பாரம்பரிய மை பயன்படுத்தப்படும். ஒருவர் அடையாள மையை அழித்துவிட்டு மீண்டும் வாக்களிக்க முயன்றாலும் அது சாத்தியமில்லை. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியது குறிப்பிடத்தக்கது.