புதுடெல்லி: “ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்காமல் தடுப்பது, தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த 9-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு தணிக்கை சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல், மத்திய அரசு முடக்கியுள்ளது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “ஜனநாயகன் திரைப்படத்தை மத்திய அரசு முடக்கியிருப்பது, தமிழ் கலாச்சாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். பிரதமர் மோடி அவர்களே, தமிழ் மக்களின் குரலை ஒடுக்கும் இந்த முயற்சியில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “வெட்கமற்ற பழக்க வழக்கமுள்ள பொய்யர் மற்றும் போலி செய்திகளை விற்பவர் ராகுல் காந்தி.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்று காங்கிரஸ்காரர்கள் கூறி தமிழர்களின் உணர்வுகள், கலாச்சாரம், பெருமை போன்றவற்றை அவமதித்தனர்.
காங்கிரஸ் அரசு தான் ஜல்லிக்கட்டை கடுமையாக எதிர்த்தது. ஆனால், ஜல்லிக்கட்டுக்கு பிரதமர் மோடி ஆதரவளித்தார். அதன்பிறகு ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. ராகுல் காந்தி இப்போது வெளியிட்டுள்ள கருத்து, அவரது உள்நோக்கத்தை காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கூறும்போது, “காங்கிரஸ் ஆட்சி காலத்தில், ஒரிஜினல் பராசக்தி திரைப்படம் வந்தது. கருணாநிதி வசனத்தில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு இரண்டு நாட்கள் மவுண்ட் ரோடில் உள்ள திரையரங்கில் சென்சார் செய்து 130 கட் கொடுத்தார்கள்.
அப்படிப்பட்ட பாரம்பரியத்தை வைத்திருக்கும் ராகுல் காந்தி, எமர்ஜென்சியை கொண்டு வந்து குரல்வளையை நெறித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி 'ஜனநாயகன்' படத்தை பேசுகின்றார்” என்று கூறியுள்ளார்.