இந்தியா

‘சிதைக்கப்படும் ஜனநாயகம்’ - சோனம் வாங்சுக் மீதான காவல் துறை நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

மோகன் கணபதி

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், அங்கிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ், சிவ சேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவில் ஜனநாயகம் பலவந்தமாக சிதைக்கப்படுவதாகவும் அவை விமர்சித்துள்ளன.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு 21 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், டெல்லி போலீசாரால் இன்று காலை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அகற்றப்பட்டார். அவர், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில், சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக போராட்டக்களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சிவ சேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் இளம் தலைவர் ஆதித்ய தாக்கரே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியாவில் ஜனநாயகம் வெட்கக்கேடான முறையில் பலவந்தமாக சிதைக்கப்படுவதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. திறமையற்ற அமைச்சருக்கு எதிராக மாணவர்கள் மேற்கொள்ளும் அமைதியான போராட்டங்களைக்கூட போறுத்துக்கொள்ள முடியாத நிலை உள்ளது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமைதியான போராட்டத்தை, ஒடுக்கப்பட வேண்டிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகக் கருதும் மத்திய அரசின் மனநிலையையே இந்த போலீஸ் நடவடிக்கை பிரதிபலிப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கங்கை நதியைக் காக்க 111 நாட்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பேராசிரியர் ஜி.டி. அகர்வால், ஹரியானாவைச் சேர்ந்த ஒலிம்பிக் மல்யுத்த வீரர், நமது 750 விவசாயக் குடும்பத் தலைவர்கள், தலித்துகள், பழங்குடியின மக்கள், வினாத்தாள் கசிவால் பலியான 25 மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் என இந்த கொடுங்கோல் அரசாங்கம் யாரையும் விட்டுவைக்கவில்லை.

குரல் எழுப்பும் ஒவ்வொருவரும் அவர்களின் பார்வையில் ஒரு தேசவிரோதி; ஒரு ஒட்டுண்ணி. ஜந்தர் மந்தரில் இன்று நடந்த சம்பவம் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீது படிந்த மற்றொரு கரும்புள்ளி. மாணவர்களின் குரல் என்ற முழக்கம் கோட்டா மற்றும் டேராடூனில் இருந்து தொடங்கியுள்ளது. அது நிச்சயம் டெல்லியின் வாசலையும் எட்டும்” என தெரிவித்துள்ளார்.

சோனம் வாங்சுக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இத்தகைய ஆணவம் சரியல்ல. அவரை பலவந்தமாக அகற்றுவதற்குப் பதிலாக மத்திய அரசு அவருடன் பேசியிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ள மற்றொரு எக்ஸ் பதிவில், “சோனம் வாங்சுக், அபிஜித் திப்கே மற்றும் இளைஞர்கள் அனைவரும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகப் போராடுகிறார்கள். வீட்டில் அமைதியாக உட்கார்ந்திருப்பது இனி பலனளிக்காது. இப்போது அனைவரும் ஒன்றிணைந்து வீதிகளில் இறங்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் ஒரு மாற்றம் ஏற்படும். எழுந்து நில்லுங்கள். நாம் ஜந்தர் மந்தருக்குச் செல்வோம்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “மருத்துவமனையில் சோனம் வாங்சுக் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உடல் பலவீனம் அடைந்தாலும், அவர் உறுதியுடன் இருக்கிறார். திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி திங்கள்கிழமை நடைபெறும். அவருக்கு பதிலாக நானே பேரணியை முன்னின்று நடத்துவேன். வலுக்கட்டாயமாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்துவிட்டதால், பேரணியை தடுத்துவிட முடியாது” என்று சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT