புதுடெல்லி: சிவில் நீதிபதிகள் பணிக்கான கட்டாய வழக்கறிஞர் பயிற்சியை 3 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இளநிலை சிவில் நீதிபதிகள் நியமனம் பெறுவதற்கு 3 ஆண்டுகள் வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம் என்ற விதிமுறை உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இதனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து வந்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மாசி, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதன்படி சிவில் நீதிபதிகள் பணி நியமனத்துக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உயர் நீதிமன்றங்கள் சட்டப் பல்கலைக்கழகங்களின் ஆலோசனையைப் பெற்று இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, சிவில் நீதிபதியாக நியமனம் பெற ஓராண்டு வழக்கறிஞர் பயிற்சி என்பது கட்டாயம் தேவை. மேலும், வழக்கறிஞராகப் பணியாற்றுவது மட்டுமல்லாமல் மாற்று சட்ட பணிகளில் பணியாற்றுவதையும் பயிற்சி காலமாகக் கருதலாம். தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் பயிற்சி நீதித்துறை அதிகாரிகளாக பணியாற்றுவதோடு மாநில நீதித்துறை அகாடமியில் ஓராண்டு தீவிரப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட அல்லது அமர்வு நீதிபதியின் கீழ் 6 மாதமும், உயர் நீதிமன்ற நீதிபதியின் கீழ் 6 மாத காலமும் உதவியாளர் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சி குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு மதிப்பீட்டு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் பயிற்சி நீதித்துறை அதிகாரியாக இருப்பவர் நிரந்தர பதவியில் நியமிக்கப்படுவார். இந்தத் தீர்ப்புக்கு ஏற்ப உயர் நீதிமன்றங்கள் 3 மாதங்களுக்குள் நீதித்துறை பணி நியமனம் தொடர்பான விதிகளை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.