இந்தியா

“பிறரது தாய்மொழியை பழிக்கக் கூடாது” - காசி தமிழ்ச் சங்கமம் 5.0 நிகழ்வில் சி.பி.ராதாகிருஷ்ணன் உரை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பிறரது தாய்மொழியை நாம் ஒருபோதும் பழிக்கக் கூடாது என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தின் ஐந்தாவது பதிப்பு (கேடிஎஸ் 5.0) இன்று தொடங்கியது. குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இதை தொடங்கி வைத்தார்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை, ஐஐடி மெட்ராஸ், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.

இவர்களுடன், உத்தரப் பிரதேச அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பும் இதில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வைத் தொடங்கிவைத்து உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், “உலகின் ஆன்மிகத் தலைநகரம் என்று போற்றப்பட வேண்டிய ஒரே ஒரு நகரம் உண்டென்றால், அது காசி மட்டும்தான். காசியின் ஒவ்வொரு அணுவிலும், இங்கு வீசும் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும் சிவபெருமானின் திருநாமம் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அத்தகைய தனித்துவம் வாய்ந்த புனித நகரம் காசி. தமிழ் மக்களின் இதயத்தில் காசிக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ஏனென்றால், காசிக்கு வந்து விஸ்வநாதரைத் தரிசிக்கும்போதுதான் நமது ஆன்மிக உணர்வு முழுமை பெறுகிறது.

இந்த ஆழமான நம்பிக்கை தமிழர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் நிறைந்திருக்கிறது. ஒருவரது தாய்மொழி, தாய், தாய் மதம் ஆகிய மூன்றும் மாற்றத்தக்கவை அல்ல. ஒவ்வொருவருக்கும் தாயின் மீதும், தாய்மொழியின் மீதும், தாய் மதத்தின் மீதும் மகத்தான பற்று இருப்பது இயல்பானது. அதுவே இயற்கை. அதுவே உண்மை.

ஆனால், என் தாயின் மீது எனக்குப் பற்று இருக்கிறது என்பதற்காக, மற்றவர்களின் தாயைப் பழித்துப் பேசுவது நாகரிகமாகுமா? அது மனிதப் பண்பாகுமா? அல்லது சிறந்த கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்குமா? நிச்சயமாக இல்லை.

அதேபோல, நமது தாய்மொழியை நாம் போற்ற வேண்டும்; பெருமையுடன் கொண்டாட வேண்டும். அதே நேரத்தில், பிறருடைய தாய்மொழிகளை ஒருபோதும் பழிக்காமலும், தூற்றாமலும், அனைத்து மொழிகளையும் மதிக்கும் பெருந்தன்மை கொண்டவர்களாக நாம் திகழ வேண்டும்.

நான் சந்திக்கின்ற பல்வேறு வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் ஒரு கேள்வி எழுப்பப்படுவது உண்டு. எங்கள் நாட்டில் இரண்டு மொழிகள்தான் பேசப்படுகின்றன; மூன்று மொழிகள்தான் பேசப்படுகின்றன. ஆனாலும், எங்களால் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை.

ஆனால், பாரதத்தில் இத்தனை மொழிகள் பேசப்பட்டாலும், எப்படி ஒரே நாடு என்ற உணர்வுடன் மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று அவர்கள் கேட்பார்கள். அவர்களுக்கு நான் அளிக்கும் ஒரே பதில், மகாகவி பாரதியாரின் வரிகள்தான். ‘செப்புமொழி பதினெட்டுடையாள் - எனில் சிந்தனை ஒன்றுடையாள்.’ இதுதான் பாரதத்தின் சிறப்பு.

நாம் பல்வேறு மொழிகளைப் பேசினாலும், அனைத்து மொழிகளும் நமக்கு ஒரே உயரிய சிந்தனையைத்தான் போதிக்கின்றன. அதுதான் இந்த மண்ணின், பாரதத் திருநாட்டின் மகத்தான தர்மம். அந்த அறநெறியும், உயரிய பண்பாடும் நமது எல்லா மொழிகளிலும் பொதிந்துள்ளன.

அதனால்தான் பாரதம் இன்று ஒரே நாடாக, ஒற்றுமையுடன் திகழ்கிறது. நமது மொழிகள் பலவாக இருக்கலாம்; ஆனால் நமது சிந்தனைகள் அனைத்தும் ஒன்றே. நமது கலாச்சாரங்கள் பலவாக இருக்கலாம்; ஆனால் நமது நாகரிகம் ஒன்றே. நமது வழிபாட்டு முறைகள் பலவாக இருக்கலாம்; ஆனால் நமது தேசிய உணர்வு ஒன்றே. என்றும் பாரதம் ஒன்றுதான்.

கங்கை நதிக்கரையிலிருந்து நான் உங்களிடம் ஒரு செய்தியைப் பகிர விரும்புகிறேன். இமயம் முதல் குமரி வரை, கங்கை முதல் காவிரி வரை, குஜராத் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை நமது பயணம் ஒன்றே; நமது இலக்கு ஒன்றே. அதுதான் ஒன்றே பாரதம், உன்னத பாரதம்!

இந்தியா என்ற ஒரு நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்பது ஒருபோதும் உண்மையல்ல. நாடு முழுவதும் பல்வேறு சிறிய சிறிய அரசுகளும், ராஜ்ஜியங்களும் இருந்திருக்கின்றன. தமிழகத்தில் அது, என்றைக்கும் ஒரே நாடாக இருந்ததில்லை.

சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு எனப் பல்வேறு பகுதிகளாகவும், பல்லவ நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு எனப் பல்வேறு பிரதேசங்களாகவும் பிரிந்து இருந்திருக்கிறது. கொங்கு நாடு கூட ஒரே மன்னரின் கீழ் ஆளப்படாமல் 24 தனித்தனி நாடுகளாகப் பிரிந்து இருந்திருக்கிறது.

இவ்வாறு அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு பிரிவுகள் இருந்தபோதிலும், இவை அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஓர் அடிப்படையான பண்பாட்டு, ஆன்மிகப் பிணைப்பு நம்மிடையே இருந்து வந்திருக்கிறது. அதனால்தான், இத்தனை வேறுபாடுகளைக் கடந்து, நாம் அனைவரும் ஒரே பாரத தேசம் என்று பெருமையுடன் கூறுகிறோம்.” என தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வித் துறை அமைச்சர் பிரஹாத் ஜோஷி, உத்தரப் பிரதேசத்தின் அமைச்சர்களான அனில் ராஜ்பர், ரவீந்திர ஜெய்ஸ்வால், சங்கர் மிஸ்ரா, ஹன்ஸ்ராஜ் விஸ்வகர்மா, மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் தீப்திகர் முகர்ஜி, பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் அஜித் குமார் சதுர்வேதி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT