நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் பி.பி.சவுத்ரி

 
இந்தியா

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் 2029-ல் அமல்: நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் பி.பி.சவுத்ரி தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் 2029-ல் அமல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை பிரதமர் மோடி முன்மொழிந்தார். இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 2023-ல் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. இதை அடிப்படையாக வைத்து ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை 2024-ம் ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து 2024 டிசம்பரில் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்காக பாஜக மூத்த எம்பி பி.பி. சவுத்ரி தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 27 மக்களவை எம்பிக்கள், 12 மாநிலங்களவை எம்பிக்கள் இடம் பெற்று உள்ளனர்.

இந்த சூழலில் பி.பி. சவுத்ரி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் 2 நாள் கூட்டம் கோவாவில் நேற்று தொடங்கியது. இதையொட்டி செய்தியாளர்களிடம் பி.பி. சவுத்ரி கூறியதாவது:

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கொள்கை வரையறுக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு கட்டங்களாக தேர்தல்களை நடத்துவதால் சுமார் ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு சுட்டிக் காட்டி உள்ளது. ஒரு மாநிலத்தில் தேர்தல் நடைபெறும்போது தேர்தல் நடத்தை விதிகள் அமல் செய்யப்படுகின்றன. இதனால் அந்த மாநிலத்தின் பொருளாதாரம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களும் பாதிக்கப்படுகின்றன.

உதாரணமாக கோவாவுக்கு அருகில் உள்ள மாநிலங்களில் தேர்தல் நடைபெறும்போது, கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது.

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் பெரும்பாலும் அரசு பள்ளி ஆசிரியர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். அடிக்கடி தேர்தல் நடைபெறுவதால் அரசு பள்ளிகளின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் அமல் செய்யப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இது குறித்து தற்போது கோவா முதல்வர், மாநில அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்துகிறோம்.

ஏற்கெனவே குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, இமாச்சல், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள், சட்ட நிபுணர்கள், பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து உள்ளோம். பொது மக்களில் சுமார் 99 சதவீதம் பேர் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவாக உள்ளனர். இவ்வாறு பி.பி. சவுத்ரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT