புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடந்துள்ள நிதி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தராகண்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேதார்நாத் கோயில் நிர்வாகத்தில் விஐபி விருந்தினர்களின் தங்குமிடம், உணவு மற்றும் இதர செலவுகளுக்காகக் கோயிலின் பொது நிதியிலிருந்து முறையான ஒப்புதல் பெறாமல் முன்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது நிதி நிர்வாகத்தில் நடந்துள்ள மிகப்பெரிய விதிமீறல் என முதற்கட்ட விசாரணை அறிக்கை உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாகச் சுற்றுலாத் துறை துணைச் செயலாளர் அனில்குமார் பாண்டே அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், அப்போதைய கோயில் மேலாளர், முதன்மைப் பொறுப்பு அதிகாரி, முதன்மைச் செயல் அதிகாரி ஆகியோர் மீது ‘ஸ்ரீபத்ரிநாத் - கேதார்நாத் கோயில் கமிட்டி சட்டம் 1939’-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்க தற்போதைய முதன்மைச் செயல் அதிகாரிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மற்றொரு சம்பவமாக, பத்ரிநாத் கோயிலில் கடந்த ஜூலை 2ம் தேதி பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பணம் எண்ணப்பட்டபோது பெரும் திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. பாதுகாப்பு விதிகளை முழுமையாக மீறி காணிக்கை அறையிலிருந்து பணம் வெளியே கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாகக் கோயில் பொறுப்பு அதிகாரி யுத்வீர் புஷ்பவான் அளித்த புகாரின் பேரில் பத்ரிநாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கில் இதுவரை 5 முக்கிய சாட்சிகளிடம் நேரடி விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றுள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகால கோயில் வங்கி கணக்கு விவரங்களைக் காவல் துறையிடம் ஒப்படைக்கக் கோயில் கமிட்டி முடிவு செய்துள்ளது.
ஜூலை 2ம் தேதி பதிவான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிப் போலீஸார் ஆய்வு செய்தபோது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள கோயில் ஊழியர் பிரமோத் நவுடியல், காணிக்கை எண்ணும் அறையிலிருந்து ரூ.500, ரூ.100 நோட்டுக் கட்டுகள், தங்க- வெள்ளிக் காசுகள், புனிதமான சாலி கிராமக் கற்கள் (பூஜைக் கற்கள்) மற்றும் சுமார் 10 முதல் 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காணிக்கை கவர்களைத் திருடி, தனது சொந்த அலுவலக அறையில் பதுக்கியது கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
சாமோலி மாவட்ட எஸ்பி சுர்ஜித் சிங் பன்வார் கூறுகையில், “சிசிடிவி கட்டுப்பாட்டு அறை அதிகாரி பன்வார், காணிக்கை எண்ணும் போது உடனிருந்த ஹரேந்தர் கோத்தாரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தின் உள்விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட கைது நடவடிக்கை பாயும்” என்றார்.
இதற்கிடையே, தன் மீதான சஸ்பெண்ட் உத்தரவையும் போலீஸ் வழக்கையும் எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட ஊழியர் பிரமோத் நவுடியல் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அலோக் மெஹ்ரா, இது குறித்து கோயில் கமிட்டி பதிலளிக்க உத்தரவிட்டார்.
தற்போது இந்த முறைகேடு வழக்குகளை உள்ளூர் போலீஸ், சிறப்பு புலனாய்வுக் குழு, கோயில் கமிட்டியின் துறை ரீதியான குழு மற்றும் கர்வால் கோட்ட ஆணையர் தலைமையிலான உயர்மட்டக் குழு விசாரித்து வருகிறது.