புவனேஸ்வர்: ஒடிசாவில் ஏழை பெண்களுக்கு திருமண உதவியாக ரூ.51,000 வழங்கும் திட்டத்தை கொண்டுவர மாநில பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஒடிசாவில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், 24 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியை தோற்கடித்து பாஜக முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ஒரு கோடிக்கு மேற்பட்ட பெண்களுக்கு சுபத்ரா திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் 21 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு 5 ஆண்டு காலத்துக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்பட்டது. இத்திட்டம் பெண்களை வெகுவாக கவர்ந்தது.
அதேபோல் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை பெண்களுக்கு முதல்வரின் திருமண உதவி திட்டத்தின் கீழ் ஏழை பெண்களின் திருமணத்துக்கு ரூ.51 நிதியுதவி அளிக்கப்படும். இதில் ரூ.35,000 பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். ரூ.10,000 மதிப்பில் மணமகளுக்கான பரிசு பொருட்கள் வழங்கப்படும். ரூ.6,000 திருமணத்துக்கான போக்குவரத்து செலவுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.60 கோடி செலவு செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.