இந்தியா

ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி அக்.6-ல் தேர்தல் ஆணையம் முற்றுகை: கார்கே

இண்டியா கூட்டணிக் கட்சிகள் கூட்டத்துக்குப் பிறகு அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்​தி, அக்டோபர் 6-ம் தேதி தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் போராட்​டம் நடத்​தப்​படும்’’ என்று இண்டியா கூட்டணி அறி​வித்​துள்​ளது. நாடு முழு​வதும் தேர்​தல் ஆணையத்தால் நடத்​தப்​பட்டு வரும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) தொடர்​பாகத் தேர்​தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறு​பாடு நில​விய​தாகப் புகார் எழுந்​துள்​ளது. இதையடுத்​து, தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் உடனடி​யாகப் பதவி விலக வேண்​டும் என்று காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சி​யினர் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், இண்​டியா கூட்​டணி கட்​சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. டெல்​லி​யில் உள்ள கான்​ஸ்​டிட்​யூஷன் கிளப்​பில் நடை​பெற்ற இக்​கூட்​டத்​தில், காங்கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, மூத்த தலை​வர்​கள் சோனியா காந்​தி, ராகுல் காந்தி கலந்து கொண்டனர். இந்த கூட்​டத்​தில் ஜம்மு காஷ்மீர் முதல்​வர் உமர் அப்துல்​லா, மேற்கு வங்க முன்​னாள் முதல்​வர் மம்தா பானர்​ஜி, பிஹார் எதிர்க்​கட்​சித் தலை​வர் தேஜஸ்வி யாதவ் உள்​ளிட்ட கூட்டணிக் கட்​சித் தலை​வர்​கள் பலரும் பங்​கேற்​றனர்.

இந்​தக் கூட்​டத்​துக்​குப் பிறகு இண்​டியா கூட்​ட​ணிக் கட்​சிகளின் தலை​வர்​கள் பத்​திரி​கை​யாளர்​களைச் சந்​தித்​தனர். அப்​போது மல்லி​கார்​ஜுன கார்கே கூறிய​தாவது: எஸ்​ஐஆர் மூலம் நாடு முழுவதும் சுமார் 13.3 கோடி பேர் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டு, அவர்​களின் ஜனநாயக உரிமை பறிக்​கப்​பட்​டுள்​ளது. எஸ்​ஐஆர் நடவடிக்​கை​யைத் திரும்​பப் பெற வேண்​டும். வாக்காளர் பட்​டியல்​களில் அதிக வெளிப்​படைத்​தன்மை வேண்டும்.

தகு​தி​யான வாக்​காளர்​கள் நீக்​கப்​படு​வதற்கு எதி​ரான பாது​காப்பு ஏற்​பாடு​கள் வேண்​டும். மேலும், எதிர்​காலத் தேர்​தல்​களுக்​குச் சிறப்பு வாக்​காளர் பதிவுக்கு முந்​தைய வாக்​காளர் பட்டியல்களைப் பயன்​படுத்த வேண்​டும். வாக்​காளர்​கள் நீக்​கப்​படு​வதற்கு முன்பு முன் அறி​விப்பு காரணங்​கள் மற்​றும் ஒரு பயனுள்ள மேல்​முறை​யீட்டு வழி​முறை இருக்க வேண்​டும். அரசியலமைப்​பின் 324-வது பிரி​வில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளபடி, ஒரு சுதந்​திர​மான மற்​றும் பாரபட்​சமற்ற தேர்​தல் ஆணை​யம் இல்லாமல் நம்​பக​மான தேர்​தல் நடை​பெற முடி​யாது.

இன்று நமது தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் முற்​றி​லும் அம்​பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளார். அவர் உடனடி​யாகப் பதவி விலக வேண்​டும். மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் விஷ​யத்​தி​லும் நமது நிலைப்​பாடு தெளி​வாக இருக்க வேண்​டும். பாஜக தனது தேவைக்கேற்ப பயன்​படுத்த முடிவு செய்​யும் இயந்​திரங்​கள் இவை. எனவே, இந்​தி​யா​வின் தேர்​தல் அமைப்​பின் மீதான நம்பிக்கையை மீட்​டெடுக்க, நாம் வாக்​குச்​சீட்டு முறைக்​குத் திரும்ப வேண்​டும்.

‘ஜன​நாயகம் காப்​போம்’

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் இண்​டியா கூட்​ட​ணிக் கட்​சிகளின் சார்பில் ‘ஜன​நாயகம் காப்​போம்’ என்ற தலைப்​பில் நாடு முழுவதும் போராட்​டங்​கள் நடத்​தப்​படும். அதன்​படி அக்​டோபர் 2 முதல் அக்​டோபர் 8 வரை நாடு முழு​வதும் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கங்​களுக்கு வெளியே ஆர்ப்​பாட்​டங்​கள் நடத்​தப்​படும். அக்டோபர் 6-ம் தேதி அனைத்து எதிர்க்​கட்சி எம்​.பி.க்​களும் தேர்தல் ஆணை​யத்தை நோக்​கிப் பேரணி​யாகச் சென்று முற்றுகை போராட்​டம் நடத்​தவுள்​ளோம்.

அக்​டோபர் இரண்​டாம் வாரத்​தில் குடியரசுத் தலை​வரைச் சந்திக்க நேரம் கோரு​வோம். அவரிடம் தேர்​தல் ஆணை​யம் எவ்வாறு கையகப்​படுத்​தப்​படு​கிறது என்​பதை விளக்​கு​வோம். மேலும், இந்​தப் பிரச்​சா​ரத்​தின் 4-ம் கட்​டத்​தில் 5 பெரிய பேரணிகள் நடத்​தப்​படும். அதற்​கான இடங்​களும் தேதி​களும் விரை​வில் இறுதி செய்​யப்​படும்.

நவம்​பர் 1-ம் தேதி டெல்​லி​யில் மிகப்​பெரிய பேரணி நடத்​தப்​படும். அதில் தேர்​தல் ஆணை​யத்​தின் ‘​வாக்​கு திருட்​டு’ குறித்​து மக்களிடம்​ விளக்​கப்​படும்​. மேலும்​, எஸ்​ஐஆர்​ மற்​றும்​ பிற தேர்​தல்​ முறை​கேடு​கள்​ தொடர்​​பாக நிலு​வை​யில்​ உள்​ள வழக்​கு​களை விரைந்​து வி​சா​ரிக்​கு​மாறு உச்​ச நீ​தி​மன்​றத்​தை​யும்​ அணுகு​வோம்​. இவ்​​வாறு ​கார்கே கூறி​னார்​.

கவனம் ஈர்த்த சோனியா, மம்தாவின் பாசப் பிணைப்பு

இண்​டியா கூட்​ட​ணிக் கட்​சிகளின் கூட்​டத்​தின்​போது, சோனியா காந்தி மற்​றும் மம்தா பானர்ஜி இடையே நிகழ்ந்த அன்​பான தருணம் பெரும் கவனத்​தைப் பெற்​றது. செய்​தி​யாளர் சந்​திப்​பில் மம்தா பானர்ஜி பேசி​ய​போது, அவருக்கு அரு​கில் அமர்ந்​திருந்த சோனியா காந்​தி, புன்​னகை​யுடன் ஆதரவு தெரி​வித்து தலை அசைத்​ததோடு, மேசையைத் தட்டி​யும் உற்​சாகப்​படுத்​தி​னார்.

ஜனநாயகத்தை காக்​கும் போராட்​டத்​தில் அனை​வரும் பங்​கேற்க வேண்​டும் என மம்தா அழைப்பு விடுத்​த​போது, சோனியா அவரது முதுகில் தட்​டிக் கொடுத்து பாராட்​டி​னார். இது தொடர்​பான வீடியோவை காங்​கிரஸ் கட்சி எக்ஸ் தளத்​தில் பகிர்ந்​துள்​ளது. அதனுடன் “அச்​சமற்ற, உறு​தி​யான தலை​வர்​கள் வெறும் போராட்டம் நடத்​து​பவர்கள் அல்ல; போராடு​பவர்​களை பாராட்டவும் செய்​கிறார்​கள்” என்று குறிப்​பிட்​டப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT