புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான அமைதியை மீட்டெடுக்கவே அணுசக்தி மசோதா வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் 2026 நிதியாண்டுக்கான தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தில் தற்போது கையெழுத்திட்டுள்ளார். அந்த சட்டம் 3,100 பக்கங்களைக் கொண்டது. அதன் 1912-வது பக்கத்தில், அணுசக்திப் பொறுப்பு விதிகள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே கூட்டு மதிப்பீடு குறித்த குறிப்பு உள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு, நாடாளுமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அணுசக்தி சேதத்துக்கான சிவில் பொறுப்புச் சட்டத்தின் முக்கிய விதிகளை நீக்கிய ‘சாந்தி’ மசோதாவை பிரதமர் ஏன் நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றினார் என்பது இப்போது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் தனது நண்பராக இருந்தவருடன் சாந்தியை மீட்டெடுக்கவே இது நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘சாந்தி’ சட்டத்தை ட்ரம்ப் சட்டம் என்றும் அழைக்கலாம். அதாவது, உலை பயன்பாடு மற்றம் மேலாண்மை வாக்குறுதிச் சட்டம் (TRUMP Act - The Reactor Use and Management Promise Act)’’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவை மாற்றுவதற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டு மசோதா, 2025-ஐ [Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI)] அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த 15-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதா குறித்து குறிப்பிட்ட அணுசக்தி அமைச்சகம், ‘‘அணுசக்தியை நிர்வகிக்கும் இந்தியாவின் சட்ட கட்டமைப்பைப் புதுப்பிக்கும் நோக்கிலானது இந்த மசோதா. இந்த மசோதா, 1962-ம் ஆண்டு அணுசக்தி சட்டம் மற்றும் 2010-ம் ஆண்டு அணுசக்தி சேதத்துக்கான சிவில் பொறுப்புச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்து, தற்போதைய மற்றும் எதிர்கால எரிசக்தித் தேவைகளுக்கு ஏற்ப விரிவான ஒரு சட்டத்தால் மாற்ற முயல்கிறது.
இந்த மசோதா, இந்தியாவின் நீண்டகால எரிசக்தி மற்றும் காலநிலை இலக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் நீக்கத்துக்கான நாட்டின் செயல் திட்டத்தையும், 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி திறனை அடைவதற்கான இலக்கையும் இது கோடிட்டு காட்டுகிறது. இந்த நோக்கங்களை நிறைவேற்ற, உள்நாட்டு அணுசக்தி வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, பொது மற்றும் தனியார் துறைகளின் தீவிர பங்கேற்பை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை மசோதா வலியுறுத்துகிறது.
அணுசக்தி உற்பத்தி அல்லது பயன்பாட்டில் ஈடுபட்டுள்ள குறிப்பிட்ட நபர்களுக்கு உரிமம் மற்றும் பாதுகாப்பு அங்கீகாரத்துக்கான விதிகளை மசோதா வகுப்பதுடன், இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்வதற்கான தெளிவான காரணங்களையும் வழங்குகிறது. சுகாதாரம், உணவு மற்றும் விவசாயம், தொழில் மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளில் அணு மற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த முயல்கிறது, அதே நேரத்தில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை நடவடிக்கைகளுக்கு உரிமத் தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கிறது’’ என தெரிவித்திருந்தது.
பின்னர் இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழு பரிசீலனைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் அவை வலியுறுத்தின. இதை அரசு நிராகரித்தது. இதனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.