இந்தியா

நீட் வினாத்தாளை என்டிஏ பேராசிரியர்களே விற்றனர்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) சேர்ந்த பேராசிரியர்​களே பணத்​துக்​காக நீட் வினாத்​தாளை விற்​பனை செய்​துள்​ளனர் என்று சிபிஐ குற்​றப்​பத்​திரி​கை​யில் தெரிவிக்கப்பட்டு உள்​ளது.

மருத்​துவ இளநிலைப் படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடை​பெற்​றது. இந்த தேர்​வின் வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டு, கடந்த ஜூன் 21-ம் தேதி நீட் மறு​தேர்வு நடை​பெற்​றது. நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து உள்​ளது. அந்த அமைப்பை சேர்ந்த 72 மூத்​த அ​தி​காரி​கள், 8 தடய​வியல் நிபுணர்கள் தீவிர விசா​ரணையை நடத்தி வரு​கின்​றனர்.

வழக்கு தொடர்​பாக தேசிய தேர்வு முகமை​யின் நீட் வினாத்​தாள் தயாரிக்​கும் குழு​வில் இடம்​பெற்​றிருந்த தாவர​வியல் பேராசிரியை மணிஷா குரு​நாத், வேதி​யியல் பேராசிரியர் பி.​வி.குல்​கர்​னி, இயற்​பியல் பேராசிரியை மணிஷா சஞ்​சய் ஹவல்தார், தனி​யார் நீட் பயிற்சி மைய இயக்​குநர் சிவ​ராஜ் ரகுநாத், அழகு​கலை நிபுணர் மணிஷா வாக்​மரே, இடைத்தரகர்கள் தனஞ்​செய் லோகண்​டே, சுபம் கைர்​னார், யாஷ் யாதவ், மங்​கிலால் பிவால், தினேஷ் பிவால், விகாஷ் பிவால், மருத்து​வர் மனோஜ் ஷிரூரே, தனி​யார் நீட் பயிற்சி மைய ஆசிரியர் ஹர்​ஷத் குமார் ஷா ஆகியோர் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர்.

டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்​தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. கடந்த ஜூலை 28-ம் தேதி சிபிஐ தரப்​பில் நீதி​மன்​றத்​தில் 94 பக்க குற்​றப் பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதன் விவரங்​கள் தற்​போது வெளி​யாகி உள்​ளன. சிபிஐ குற்​றப் பத்​திரி​கை​யில் கூறியிருப்பதாவது:

தேசிய தேர்வு முகமை​யின் நீட் வினாத்​தாள் தயாரிப்பு குழு​வில் இடம்​பெற்​றிருந்த தாவர​வியல் பேராசிரியை மணிஷா குரு​நாத், வேதி​யியல் பேரா சிரியர் பி.​வி.குல்​கர்​னி, இயற்​பியல் பேராசிரியை மணிஷா சஞ்​சய் ஹவல்​தார் ஆகியோர் பணத்​துக்​காக நீட் வினாத்​தாளை விற்​பனை செய்​துள்​ளனர்.

நீட் வினாத்​தாள் தயாரிப்​பின்​போது இவர்​கள் 3 பேரும் வினாக்களை மனப்​பாடம் செய்​துள்​ளனர். பின்​னர் தாங்​கள் தங்கி​யிருந்த ஓட்​டலுக்கு திரும்பி வினாக்​களை கைப்பட எழுதி உள்​ளனர். மூன்று பேரும் கைப்​பிர​தி​யாக தயாரித்த வினாக்​கள் மகா​ராஷ்டி​ராவை சேர்ந்த இடைத்​தரகர் தனஞ்​செய் லோகண்​டேவுக்கு பெரும் தொகைக்கு விற்​பனை செய்​யப்​பட்டு உள்​ளது. அவரிடம் இருந்து ஹரி​யா​னாவை சேர்ந்த சுபம் கைர்​னார், நீட் வினாத்​தாளை வாங்கி உள்​ளார். பின்​னர் யாஷ் யாதவ், மங்கிலால் பிவால், தினேஷ் பிவால், விகாஷ் ஆகியோ​ருக்கு நீட் வினாத்​தாள் அடுத்​தடுத்து விற்​பனை செய்​யப்​பட்டு இருக்​கிறது.

இந்த இடைத்​தரகர்​கள் மூலம் டெலிகி​ராம் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​கள் வாயி​லாக ஏராள​மானோருக்கு நீட் வினாத்​தாள் விற்பனை செய்​யப்​பட்டு உள்​ளது. இறு​திக் கட்​டத்​தில் நீட் தேர்வுக்கு தயா​ரான மாணவ, மாண​வியருக்கு ஒரு வினாத்​தாள் ரூ.12 லட்​சம் முதல் ரூ.25 லட்​சம் வரை விற்​பனை செய்​யப்​பட்டு இருக்​கிறது. இடைத்​தரகர்​களிடம் இருந்து வினாத்​தாள் கசிவு தொடர்​பாக டெல்​லி, ஹரி​யா​னா, ராஜஸ்​தான், மகா​ராஷ்டிரா மாநிலங்​களில் இது​வரை 92 இடங்​களில் சோதனை நடத்​தப்​பட்டு உள்​ளது.

360 சாட்​சிகளிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டிருக்​கிறது. 20,000 பக்க ஆவணங்​கள் குற்​றப் பத்​திரி​கை​யில் இணைக்​கப்​பட்டு உள்​ளன. குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் பயன்​படுத்​திய மொபைல் போன், லேப்​டாப் உள்​ளிட்ட மின்​னணு சாதனங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்டு உள்​ளன. இவ்​வாறு குற்​றப்பத்​திரி​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

SCROLL FOR NEXT